வணிகம்

அடுத்த 20 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் நாடாக இந்தியா உயரும்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்திய பொருளாதாரம் இன்னும் 20 வருடங்களில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 35-வது சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரகதி மைதானத்தில் தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

தற்போது இந்தியா 2.1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ளது. இன்னும் 20 வருடங்களில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு உற்பத்தித் துறையை முடுக்கி விட வேண்டும், அதேபோல புதுமைகளைப் புகுத்த வேண்டும்.

கடந்த சில வருடங்களாக சர்வதேச அளவில் பிரச்சினைகள் இருந்தது. உலகின் முக்கியமான நாடுகள் பிரச்சினையில் சிக்கி தவித்தாலும் கூட இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரே ஒரு வருடத்தில் மட்டுமே நாம் 5 சதவீத வளர்ச்சிக்கு (2012-13) கீழே சென்றோம். இப்போது பொருளாதாரம் மீண்டு 7 சதவீத வளர்ச்சிக்கு மேலே இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 7.2 சதவீத வளர்ச்சி இருந்தது. இப்போது வரும் பொருளாதார தகவல்கள் நன்றாக இருப்பதினால், வரும் நிதி ஆண்டுகளில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. தொழிற் உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நிதிபற்றாக்குறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2017-18ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு குறைந்திருக்கிறது. இதனால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேம்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அரசாங்கம் எடுத்துள்ள பல நடவடிக்கைகளுக்கு சாதகமான விளைவுகள் வந்துள்ளன. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவை நல்ல பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த வருடம் ஜன்தன் யோஜனாவின் கீழ் 14 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஐஐடிஎப் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பணியை செய்துவருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பல நாடுகள் ஒரே இடத்தில் தங்களுடைய தொழில் சம்பந்தமான கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது.

பல துறையில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் புரிவதற்கு எளிதாக சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றார்.

இந்த கண்காட்சியில் சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளில் இருந்து 7,000க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொண்டன.

ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா முகம்மது அப்தலி கூறும் போது இந்த கண்காட்சியால் இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT