வணிகம்

‘பணவீக்கம், உயர் வட்டியைக் கட்டுப்படுத்துவோம்’

செய்திப்பிரிவு

அதிகரித்துது வரும் பணவீக்கம், கடனுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். மாநில நிதி அமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் பணவீக்கம், உயர் வட்டி எனும் நச்சுச் சுழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதனால் சாதாரண மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது என்றார் ஜேட்லி.

பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை, அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியன நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் விஷயங்களாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது.

சில மாநிலங்கள் அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படிப் பார்க்கும்போது இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை அரசு நிச்சயம் எடுக்கும்.

2014-ம்ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல எந்த ஒரு காரணத்துக்காகவும் பொருளாதார வளர்ச்சியில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டார். மேலும் இந்த வளர்ச்சியின் பங்கு ஒரு பகுதிக்கு மட்டும் செல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

பொருள்களின் விலையில் நிலவும் தாற்காலிக ஏற்ற, இறக்க நிலவரங்களை மாநிலங்கள் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பொருள் விநியோகத்தில் நிலவும் குறைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வரவேண் டியுள்ளது. மேலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து பதுக்கல்காரர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரே வேளாண் விற்பனைச் சந்தை, தகவல் பரிமாற்றத்தில் தொய்வில்லாத தன்மை, விவசாயி களுக்கும், நுகர்வோருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலை நிர்ணயம் ஆகியவை இப்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சிப் பாதைக்கு மிகவும் அவசியமானது சரக்கு சேவை வரி விதிப்பாகும் (ஜிஎஸ்டி). இதில் சில குறைகள் இருப்பினும் அவை தீர்க்கப்படக்கூடியதே. இந்த குறைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று ஜேட்லி உறுதியளித்தார்.

வரி வருவாய் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது. இது முன்னர் 10.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. அதிகார பகிர்வில் மாநிலங்கள் தங்களது பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

முறையான ரேஷன் பொருள் விநியோகம் மூலம்தான் ஏழை மக்களைக் காக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், தேசிய உணவு கார்ப்பரேஷனின் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்தப்பட்டு உணவுப் பொருள்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT