பிரதமராக மோடி பதவி ஏற்றதற்கு பிறகு அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி இருக்கிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பஞ்சாப் ஹரியாணா டெல்லி தொழில் வர்த்தக சபை (பி.ஹெச்.டி சேம்பர் ஆப் காமர்ஸ்) விழாவில் பேசிய ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு பொறுப்பேற்ற யூபிஏ அரசு வாஜ்பாய் அரசுக்கு சரிசமமாக செயல்பட முடியவில்லை. 2014-ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது நாட்டின் நிலைமை எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். இப்போது பொருளாதாரம் மீண்டு 7.5 சதவீத வளர்ச்சி என்ற நிலைமையில் இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
எதிர்கட்சிகள் பருப்பு விலை உயர்ந்து விட்டது, காய்கறி விலை உயர்ந்துவிட்டது என்று கூறிவருகின்றனர். இதனை குறைப் பதற்கு நாங்கள் பல நடவடிக்கை கள் எடுத்து வருகிறோம். பல பொருட்களை இறக்குமதி செய்திருப்பதால், இப்போது அதன் விலைகள் கட்டுக்குள் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம் என்பதை பிரதமர் மோடி பல முறை கூறி இருக்கிறார். அரசாங்கம் இதற்கு பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதன் மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். விரைவில் உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இருக்கும். இந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.