பங்குச்சந்தையில் முதலீடு செய் யப்பட்ட பி.எப் தொகையில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வருமானம் கிடைத் திருப்பதால் பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டை மறு பரிசீலனை செய்ய பிஎப் அமைப்பு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பிஎப் அமைப்பு 2,322 கோடி ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த இடிஎப்களில் முதலீடு செய்தது. வருடாந்திர அடிப்படையில் இந்த முதலீட்டின் மீதான லாபம் 1.52 சதவீதமாக இருக்கிறது.
நேற்று மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் இபிஎப்ஓ அமைப் பின் அறங்காவலர்கள் குழு கூடி விவாதித்தது. குறிப்பாக தொழிற்சங்கங்களை சார்ந்த அறங்காவலர்கள் பங்குச்சந்தை முதலீடு குறித்த தங்களது எதிர்ப் பினை தெரிவித்தனர்.
குறைவான வருமானம் குறித்து தொழில்சங்கங்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். இது குறித்து நிதி தணிக்கை மற்றும் முதலீட்டு (எப்ஏஐசி) குழுவில் விவாதிக்கப்படும் என பிஎப் ஆணையனர் கேகே ஜலான் தெரிவித்தார்.
நிதி தணிக்கை மற்றும் முதலீட்டு குழுவின் தலைவரும் ஜலான் என்பதால் எந்த நேரமும் இந்த குழு கூட்டப்படலாம்.
பங்குச்சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்துக்கு செய்யப்பட வேண்டும். மாதந்தோறும் இந்த முதலீடுகளை பரிசீலனை செய்வது என்பது சரியான அளவீடு அல்ல. ஐந்து வருடங்களுக்கு பிறகு பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளை அளவீடு செய்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஜலான் தெரிவித்தார். தவிர நடப்பு நிதி ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் குறித்து நேற்று விவாதிக்கப்படவில்லை என்றும் ஜலான் கூறினார்.
ஆனால், நடப்பு நிதி ஆண்டுக் கான வட்டி விகிதம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாகவும், டிசம்பர் 9-ம் தேதி அடுத்த அறங் காவலர் குழு கூடி வட்டி விகிதம் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு நிதி ஆண்டுகளாக பிஎப் மீதான வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.