கே.இ.ரகுநாதன் | கோப்புப் படம். 
வணிகம்

இப்போதைய தேவையை பூர்த்தி செய்யாத பட்ஜெட்: அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கருத்து

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பிலிருந்து 100 சதவீதம் மீண்ட நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளன. அதேபோல 60 சதவீத பாதிப்புக்குள்ளான நிறுவனங்களும் இதை வரவேற்றுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டு மீண்டுவர முடியாத நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை என்பதே உண்மை என்று அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''தொழில் தொடங்குவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகள் அனைத்துமே நீண்ட கால அடிப்படையிலானவை. இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பலன் கிடைக்க குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையாகும். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பிராணவாயுவை அளிப்பதுதான் அவசியம். அதை இந்த பட்ஜெட் அளிக்கவில்லை.

கரோனா ஊரடங்கு, அதைத் தொடர்ந்து முடங்கிய தொழில்களை மீண்டும் செயல்படுத்த முடியாமல் திணறுவோருக்கு எவ்வித நிவாரணமும் இந்த பட்ஜெட்டில் வழங்கப்படவில்லை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவற்றால் பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

ஆட்டோமொபைல் துறை ஏற்கெனவே கடும் சிரமத்தில் உள்ள சூழலில் இறக்குமதி வரியை அதிகரிப்பது அத்தொழில்துறையினரைக் கடுமையாக பாதிக்கும்.

75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றால் வங்கிகளில் போடப்படும் முதலீடுகளின் மூலம் பெறப்படும் வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். அவ்விதம் பிடித்தம் செய்யப்பட்டால், ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் அந்தப் பணத்தை முதியவர்கள் எவ்விதம் திரும்பப் பெற முடியும். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே செய்துள்ளது.

இப்போது உள்ள நெருக்கடிக்கு தீர்வுதான் அவசியம். அதைவிட்டுவிட்டு தொழிலாளர் சீர்திருத்தம் கொண்டுவரப் போவதாகக் கூறுவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.

ஏற்கெனவே வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகரைச் சுற்றி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தால் பொருள் போக்குவரத்து முடங்கியுள்ளது. உதிரி பாகங்கள் சரிவரக் கிடைக்காமல் பெருமளவு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தொழிலாளர் சீர்திருத்தம் மேலும் பிரச்சினைக்கு வழிவகுக்குமே தவிர, தீர்வாக அமையாது.

அரசு ஊழியர்கள், தகவல்தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தக் கரோனா ஊரடங்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், தனியார் துறையில் பெரும்பாலான பணியாளர்களுக்குச் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. தினசரி கூலி பெறுவோர், ஆட்டோ ஓட்டுநர், கட்டிட வேலை செய்பவர்கள் உள்ளிட்ட முறைசாரா பணியாளர்களின் நலனை யாருமே பார்ப்பதில்லை.

கடுமையான பாதிப்பை கரோனா வைரஸ் உருவாக்கியபோதிலும், அதிலிருந்து மீள்வதற்கு இத்தகைய முறைசாரா பணியாளர்களுக்கு ஏதேனும் சலுகைகளை அரசு அறிவித்திருக்கலாம். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டது.

நாளை நன்றாக இருப்போம் என்ற கோணத்தில் இப்போது அவதிப்படுபவர்களுக்கு உதவாமல் போனால் அது எப்படிச் சிறப்பாக இருக்காதோ அதைப்போலத்தான் பட்ஜெட் அறிவிப்புகளும் உள்ளன''.

இவ்வாறு ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT