வணிகம்

மத்திய பட்ஜெட் 2021: பொதுத்துறை- தனியார் பங்களிப்பில் பெரிய துறைமுகங்களை இயக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

பொதுத்துறை, தனியார் கூட்டாண்மை அடிப்படையில், ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ஏழு திட்டங்கள் பெரிய துறைமுகங்களில் செயல்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இதன் மூலம் பெரிய துறைமுகங்களின் இயக்க சேவைகளை, பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இயக்க அனுமதிக்கப்படும் என்றார்.

இந்தியாவில் வணிகக் கப்பல்கள் இயக்கத்தை மேம்படுத்த ரூ.1,624 கோடி மானிய ஆதரவு திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதற்காக உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த முன்முயற்சியால் இந்திய மாலுமிகளுக்கு பயிற்சியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

கப்பல் மறு சுழற்சித் திறனை 2024ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 4.5 மில்லியன் டன் என்ற அளவில் இருமடங்காக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பா, ஜப்பானிலிருந்து அதிக கப்பல்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் முயற்சியாக சுமார் 90 கப்பல் மறு சுழற்சி தளங்களை குஜராத் மாநிலம் அலாங்கில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT