வணிகம்

10.11 லட்சம் புதிய உறுப்பினர்கள்: பணியாளர் வருங்கால வைப்பு நிதி புதிதாக சேர்ப்பு

செய்திப்பிரிவு

பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தரவுகளின் படி, 2020 நவம்பர் மாதம் சுமார் 10.11 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், 45.29 லட்சம் நிகர உறுப்பினர்களை இந்த நிதியாண்டில் (2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை) பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இணைத்துள்ளது. நவம்பர் மாதத்தில் இணைந்து பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ள உறுப்பினர்கள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 நவம்பர் மாதத்தில் சுமார் 6.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்துள்ளனர். பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சுமார் 3.70 லட்சம் பழைய உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கிடையே உறுப்பினர்கள் பணி மாறுவதும், தங்களது பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தொடர விரும்புவதும் இதன் மூலம் தெரிகிறது.

வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் இணைவதன் மூலம், நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, பணியாளர்கள் வேலைகளுக்கு திரும்புவதும் புலனாகிறது.

இந்த நிதியாண்டில் (2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை) பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மொத்த உறுப்பினர் சேர்க்கையில் மகாராஷ்டிரா, ஹரியாணா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 53 சதவீதம் பேர் இணைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT