இந்தியாவின் மே மாத ஏற்றுமதி 12.4 சதவீதம் உயர்ந்து 2,799 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் அதிக பட்ச உயர்வு இதுதான். மேலும் இறக்குமதியும் 11.41 சதவீதம் சரிந்து 3,923 கோடி டாலராக இருக்கிறது. இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
இருப்பினும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1,008 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை மே மாதம் 1,123 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இருந்தாலும் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மே மாதத்தில் 1,937 கோடி டாலராக வர்த்தகப் பற்றாக்குறை இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 2,132 கோடி டாலராக வர்த்தகப்பற்றாக்குறை இருந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 3,704 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதி 5,363 கோடி டாலர் ஆகும். கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 8.87 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலத்தில் 4,926 கோடி டாலர் மட்டுமே ஏற்றுமதி நடந்தது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இறக்குமதி 13.16 சதவீதம் குறைந்திருக்கிறது.