ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் முன்னிலை வகித்து வரும் ஹவுசிங் டாட் காம் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) மணி ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிட்டி குரூப் மற்றும் யாகூ நிறுவனத்தில் நிர்வாக பொறுப்புகளை வகித்தவர் மணி ரங்கராஜன். பல புதிய நிறுவ னங்களை தொடங்குவதற்கு ஆலோ சகராகவும் இருந்துள்ளார். மேலும் சிலிகான் பள்ளத்தாக்கில் 20 வருட பணி அனுபவம் கொண்ட மணி, நிதி தொடர்பான திட்டமிடுதல் மற்றும் முடிவுகள் எடுப்பதில் கைதேர்ந்தவர்.
கடந்த ஜூலை மாதம் நிறுவ னத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் துணை நிறுவனரான ராகுல் யாதவ் நீக்கப்பட்ட பிறகு, உயர்பொறுப்பில் சில முக்கியமான அதிகாரிகளை ஹவுசிங் டாட் காம் நியமித்து வருகிறது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரிஷ்பாஹ் குப்தா (rishabh gupta) கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட்டில் தலைமை பிஸினஸ் அதிகாரியாக ஜேசான் கோதாரி நியமிக்கப்பட்டார்.
இது நியமனம் குறித்து தலைமை செயல் அதிகாரி ரிஷ்பாஹ் குப்தா பேசும்போது, ``ஹவுசிங் டாட் காம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து வருகிறது. அதை மூத்த நிர்வாக குழு மேலும் வலிமையாக்க வேண்டும். தற்போது நியமிக்கப் பட்டிருக்கும் மணி, சர்வதேச நிதி மற்றும் அதுதொடர்பான செயல்பாடுகளில் அனுபவம் மிக்கவர். நிறுவனத்தின் எதிர்கால வியூகங்களுக்கு அவரது வருகை மிக பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.