வணிகம்

29 நாட்களில் இந்தியாவில் தொழில் தொடங்கலாம்: உலக வங்கி அறிக்கை

செய்திப்பிரிவு

தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்று உலக வங்கி அறிக்கை வெளி யிட்டுள்ளது. 12 நடைமுறைகளை செய்து 29 நாட்களில் இந்தியாவில் தொழில் தொடங்கி விடலாம் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தொழில் தொடங்க 127 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க உகந்த இடம் என்ற தலைப்பில் உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தியா 130வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 84-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 189 நாடுகள் இந்த ஆய் வில் கலந்து கொண்டன. கடந்த வருடம் இந்தியா 142-வது இடத் தில் இருந்தது. புதிய முறைப்படி திருத்தங்களுக்கு பிறகு வெளியிட்ட பட்டியலில் கடந்த வருடம் 134-வது இடத்தில் இருந்தது.

இந்தியாவில் தொழில் செய் வதை எளிதாக்க, குறைந்தபட்ச முதலீடு மற்றும் தொழில் நட வடிக்கைகளை தொடங்குவதற்கு சான்றிதழையும் நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த இரண்டு சீர்திருத்தங்களும் டெல்லி மற்றும் மும்பை நகரங் களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது.

எளிதாக தொழில் தொடங்கு வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டி யலை மொத்தம் பத்து காரணி களின் அடிப்படையில் வகைப் படுத்துகின்றனர். சில சமயங்களில் நாட்டிற்கு வரும் அந்நிய முதலீடு களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.

தொழில் புரிவதற்கு ஆய்வு செய் யப்பட்ட காரணிகள் அடிப்படையில் இந்தியாவின் வரிசை:

தொழில் தொடங்குவதில் 155-வது இடமும், கட்டுமான அனுமதியில் 183-வது இடமும், மின்சாரம் வழங்குவதில் 70-வது இடமும், சொத்துகளை பதிவு செய்வதில் 138-வது இடமும், சிறுபான்மை முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் 8-வது இடமும், வரியை செலுத்துவதில் 157-வது இடமும் வகிக்கிறது.

கட்டுமானத்திற்கு அனுமதி வழங்குவது மற்றும் மின்சாரம் வழங்குவதிலும் இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கெளசிக் பாசு கூறியதாவது;

இந்தியா 142-வது இடத்திலிருந்து தற்போது 130-வது இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதை இந்த முன்னேற்றம் காட்டுகிறது. மேலும் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 100 இடத்திற்குள் வருவது ஒன்றும் முடியாதது அல்ல. அதற்கு அடுத்த வருடமும் இதே போல் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) கொண்டு வருவது மற்றும் அதிகார வர்க்கத்திற்கு செய்யக்கூடிய செலவுகளை குறைப்பது என்பதை உள்ளடக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த வருட பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இடம்பெற்றால் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை அடையும்

சில நாடுகள் ஒரே வருடத்தில் 30-40 இடங்கள் கூட முன்னேறும், ஆனால் இவை யாவும் சிறிய நாடுகள். இந்தியா போன்ற பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு அதிக இடங்கள் முன்னேறுவது கடினம். ஆனால் இப்போது 142வது இடத்திலிருந்து 130 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதைப் பார்க்கும் போது அதிக இடங்கள் முன்னேறுவது முடியாத காரியம் அல்ல.

மேலும் இந்தியாவில் மூன்று துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியம். முதலில் பரிமாற்ற செலவுகளை குறைக்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு ஏற்படும் அதிகார இடையூறுகளைக் குறைக்கவேண்டும். இரண்டாவது, சாலைவசதி, ரயில்வே துறை, துறைமுகங்கள் ஆகியவற்றில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்கட்டமைப்பு முதலீட்டில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இந்தியா பலதரப்பட்ட மக்களை கொண்ட நாடு. அதனால் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்த வளர்ச்சி பொருளாதாரத்திற்கு வெளியே இருந்தாலும் அதிக லாபத்தை பொருளாதாரத்திற்கு தரவல்லது” என்று கெளசிக் பாசு கூறியுள்ளார்.

இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ``இந்தியா தற்போது 130-வது இடத்திற்கு வந்திருப்பது, அடுத்த வருடத்தில் இன்னும் முன்னேறி செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” எனக் கூறினார்.

SCROLL FOR NEXT