கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மின் விநியோக அமைப்பை நவீனப்படுத்தி, மேம்படுத்துவதற்காகவும், மின்சார விநியோகத்தின் தரத்தையும், நம்பகத்தன்மையையும் அதிகரிப்பதற்காகவும், ஆசிய வளர்ச்சி வங்கியுடன் $100 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
பெங்களூரு திறன்மிகு மின்சார சிக்கன மின் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் சி எஸ் மொகபத்ரா, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய திட்டத்தின் பொறுப்பு அதிகாரி ஹோ யுன் ஜியோங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த $100 மில்லியன் அரசு கடனைத் தவிர, $90 மில்லியன் அரசு உத்தரவாதமில்லாத கடனையும் இத்திட்டத்திற்காக கர்நாடக மாநில அரசால் நடத்தப்படும் 5 மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்துக்கு (பெஸ்காம்) ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டாக்டர் மொகபத்ரா, தலைக்கு மேல் செல்லும் மின்சாரத் தடங்களை பூமியின் கீழ் பதிப்பதன் மூலம் மின்சார சிக்கனம் மிக்க விநியோக அமைப்பு கட்டமைக்கப்படுவதுடன், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நஷ்டங்கள் குறைவதோடு இயற்கை சீற்றங்கள் மற்றும் இதர வெளிப்புற காரணங்களால் ஏற்படும் மின் தடைகளும் குறையும் என்றார்.
இந்தத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு ஒரு புதிய முயற்சி என்று கூறிய ஜியோங், இதன் மூலம் பெஸ்காம் அரசை சார்ந்திருப்பது குறையும் என்றும் மூலதன செலவுகளுக்கான நிதிகளைத் திரட்டுவதில் சந்தை சார்ந்த அணுகலை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.