வணிகம்

சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன்: இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு; சர்க்கரை விலை உயரும்

செய்திப்பிரிவு

சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதலாக ரூ. 4,400 கோடியை வட்டியில்லா கடனாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது விதிக்கப்படும் வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு பயிரிடும் விவசா யிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிப்பதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இதேபோல ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானிய உதவியை இந்த ஆண்டு செப்டம்பர் வரை அளிப்பதென முடிவு செய்யப் பட்டதாகவும் செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி திங்கள்கி ழமை உயர்நிலை கூட்டத்தை பாஸ்வான் கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் இந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கல்ராஜ் மிஸ்ரா, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி, தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.எம். நிருபேந்திர மிஸ்ரா, அமைச்சரவைச் செயலர் அஜீத் சேத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நான்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக பாஸ்வான் கூறினார். முதலாவதாக சர்க்கரை ஆலை செலுத்தும் உற்பத்தி வரியின் அளவுக்கு வட்டி யில்லா கடன் தொகை ஐந்து ஆண்டுகளுக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்பு இந்த கால வரம்பு 3 ஆண்டுகளாக இருந்தது.

இத்துடன் ஆலைகள் கூடுதலாக ரூ. 4,400 கோடி வரை வட்டியில்லாத கடனாக வங்கிகளிலிருந்து பெறலாம். ஆலைகள் செலுத்தும் உற்பத்தி வரிக்கு இணையாக எவ்வளவு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பதை தங்களது துறை கணக்கிட்டு வருவதாக பாஸ்வான் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிப்பதற்காக ரூ. 6,600 கோடி தொகை வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டது. அத்துடன் செலுத்தும் உற்பத்தி வரிக்கு நிகராக வட்டியில்லா கடனை மூன்று ஆண்டுகளுக்கு அளிப்பதென அப்போது முடிவு செய்யப்பட்டது.

சர்க்கரை ஆலைகளுக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ள ஊக்கத் தொகைகளை அளிப்பதில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் சர்க்கரை ஆலைகள் இத்தகைய உறுதிமொழியை இன்றே (திங்கள்கிழமை) அளித்தால், ஆலைகளுக்கு அளிக்க உள்ள ஊக்கத் தொகைகளை அளிப்பது குறித்த அறிவிப்பை அரசு இன்றே வெளியிடும் என்றார்.

சர்க்கரை விலை உயர்வு

இறக்குமதி வரி உயர்வால் சர்க்கரை விலை மொத்த விற்பனைச் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ. 60 உயர்ந்தது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ. 1 முதல் ரூ. 2 வரை உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவ மழை தவறினால் சர்க்கரை விலை மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலுவையை விரைவில் தீர்ப்போம்

அரசு அறிவித்துள்ள சலுகை குறித்து கருத்து தெரிவித்த சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கத்தின் இயக்குநர் அவினாஷ் வர்மா, அரசு அறிவித்துள்ள சலுகை வரம்பின்படி ரூ. 6,000-ம் கோடி தொகையை வங்கியில் கேட்டால் ரூ. 4,000 கோடிதான் கிடைக்கும் என்றார். இருப்பினும் அரசு அளித்துள்ள சலுகையால் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் அளிப்போம் என்று கூறினார்.

இறக்குமதி வரி உயர்வு

இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு டன் ஒன்றுக்கு அளிக்கப்படும் ரூ. 3,300 தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலில் 10 சதவீத அளவுக்கு எத்தனால் கலப்பதற்கு பெட்ரோலிய அமைச்சர் ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார். 2006-ம் ஆண்டு பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இருப்பினும் எத்தனாலுக்கு அதிக விலையை சர்க்கரை ஆலைகள் நிர்ணயம் செய்ததால் இத்திட்டம் நிறைவேறவில்லை..

நிலுவை அதிகரித்தது ஏன்?

கரும்புக்கு அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. ஆனால் அதைவிட கூடுதல் தொகையை சில மாநில அரசுகள் நிர்ணயிக்கின்றன. இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு சுமை அதிகரித்துள்ளது என்று பாஸ்வான் கூறினார். விலை நிர்ணயம் செய்வதில் ஒருங்கி ணைந்த அணுகுமுறை அவசிய மாகிறது என்றும் பாஸ்வான் சுட்டிக் காட்டினார்.

இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையால் உள்நாட்டில் மேலும் விலை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாஸ்வான் கூறினார்.

சர்க்கரை பங்குகள் உயர்வு

சர்க்கரை துறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக பெரும் பாலான சர்க்கரை பங்குகளில் ஏற்றம் இருந்தது.ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் பங்கு 10.32 சதவீதமும், பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்கு 9.94 சதவீதமும், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் 6.71 சதவீதமும், பல்ராம்பூர் சின்னி 6.87 சதவீதமும், சக்தி சுகர்ஸ் 5 சதவீத ஏற்றத்திலும் முடிவடைந்தன.

SCROLL FOR NEXT