வணிகம்

நடப்பு ஆண்டில் டிசம்பர் 28-ம் தேதி வரை 4.37 கோடி பேர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்

செய்திப்பிரிவு

கடந்த 28-ம் தேதி வரையில் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் படிவத்தை 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. .

தனி நபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு நாளை வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என்றும் முன்னதாகவே வரி ரிட்டர்னை தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை சம்பளதாரர்களுக்கு இணையதளம் மூலம் அறிவுறுத்தல் அனுப்பி வருகிறது.

இதுதவிர ட்விட்டர் பதிவு மூலம் வருமான வரித்துறை வெளியிட்ட தகவலில், ``நீங்கள் வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். இல்லையெனில் கால தாமதம் செய்ய வேண்டாம், வருமான வரி ரிட்டர்னை இன்றே தாக்கல் செய்யுங்கள்’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 28-ம் தேதி வரையில் 2.44 கோடி பேர் ஐடிஆர்-1 படிவம் தாக்கல் செய்துள்ளனர். 95.64 லட்சம் பேர் ஐடிஆர்-4 படிவம் தாக்கல் செய்துள்ளனர். 53.12 லட்சம் பேர் ஐடிஆர்-3 படிவம் தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர 32.30 லட்சம் பேர் ஐடிஆர்-2 படிவம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இவ்விதம் தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் ஜனவரி 31, 2021-க்குள் தணிக்கை செய்யப்பட்டு விடும்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT