அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை விலக்கிக் கொள்வதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால் திடீர் விலை ஏற்றம் ஏற்பட்டது.
மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.130 ஆகவும், மும்பையில் ரூ.100 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.80 ஆகவும், சென்னையில் ரூ.120 வரை விற்பனையானது.
இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பகுதிகளிலும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் நேரடியாக வெங்காயத்தை விற்பனை செய்து வந்தன.
மேலும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு தடை விதித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் வெங்காய ஏற்றுமதிக்கான தடை விலக்கப்பட்டது
அனைத்து வகை வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 01.01.2021-இல் இருந்து மத்திய அரசு விலக்கிக் கொள்வதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.