வணிகம்

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக 2025-ம் ஆண்டில் இந்தியா முன்னேறும்: பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டு முன்னேறும் என்று பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2030-ம்ஆண்டில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது 2020-ம் ஆண்டில் இந்தியா உலகளவில் 6-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்ததால் ஐந்தாவது இடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது. தற்போது உருவான தேக்கநிலையில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் பிடிக்கும். அந்தவரிசையில் 2024-ம் ஆண்டிலேயே 5-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சிஇபிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் இங்கிலாந்து 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியது.

தற்போதுள்ள சூழலில் 2021-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும். இது 2022-ம்ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும்என்றும் சிஇபிஆர் கூறியுள்ளது.

இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக இருந்தாலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடாகத் திகழும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2035-ம் ஆண்டில் 5.8 சதவீத அளவை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உள்ள வளர்ச்சி விகித அடிப்படையில் கணக்கிட்டால் 2030-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாகஉயரும். இதன்படி 2025-ல் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும். 2027-ல் ஜெர்மனியையும், 2030-ல் ஜப்பானையும் மிஞ்சிவிடும் என குறிப்பிட்டுள்ளது.

வரும் 2028-ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு சீனா முன்னேறிவிடும் என்றும் சிஇபிஆர் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உள்ள மதிப்பீட்டின்படி மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பானை 2030-ம் ஆண்டு இந்தியா மிஞ்சிவிடும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் நான்காம் இடத்தில் உள்ள ஜெர்மனி ஐந்தாமிடத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

கரோனா பாதிப்புக்கு முன்பாகவே பொருளாதாரம் சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது. 2019-ல் கரோனா பாதிப்புகாரணமாக வளர்ச்சி 4.2 சதவீதமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. முந்தைய ஆண்டில் (2018) வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT