தங்க கடன் பத்திரம் மற்றும் தங்க டெபாசிட்டுகளுக்கான விதிமுறை களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் டெபாசிட்டு களுக்கான வட்டியை வங்கிகளே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடி முறையாக அறிவிக்க இருக்கும் சூழ்நிலையில் இந்த திட்டங்களுக்கான விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சுமார் 20,000 டன் தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தங்க டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயம் செய்துகொள்ளலாம், முதிர்வின் போது எப்படி வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம். முத லீடு செய்யப்படும் தங்கம் மற்றும் அதன் வட்டிக்கு இணையாக ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், எப்படி தேவை என்பதை டெபாசிட் செய்யும் போது வாடிக் கையாளர் தெரிவிக்கவேண்டும். அதனை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
குறுகிய கால டெபாசிட்டுகள் 1-3 வருடங்கள் வரையிலும், நடுத்தர கால டெபாசிட்டுகளுக்கு 5 முதல் 7 வருடங்கள் வரையிலும், நீண்ட கால டெபாசிட்டுகள் 12-15 வருடங்கள் வரையில் வாங்கப்படும். இந்த டெபாசிட்டுகள் வாங்கும் போது வங்கியின் பெயரில் வாங்கப்பட்டாலும், அது பின்னர் இந்திய அரசின் சார்பில் ஏற்கப்படும்.
குறுகிய கால டெபாசிட்டுகளை ரொக்க கையிருப்பு விகிதம் மற்றும் எஸ்.எல்.ஆர். விகிதமாக வங்கிகள் பயன்படுத்திகொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
ரொக்க கையிருப்பு விகிதம் என்பது வங்கிக்கு வந்திருக்கும் மொத்த டெபாசிட்டுகளில் 4 சதவீத தொகையை ரொக்கமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டும். அதேபோல, எஸ்.எல்.ஆர் என்பது மொத்த டெபாசிட்டுகளில் 21.5 சதவீதம் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும்.
தங்க டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 30 கிராம் நிர்ணயம் (கட்டி, நகைகள், நாணயங்கள் என எந்த வடிவத்திலும்) செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் திரட்டப்படும் தங்கத்தை நகைகடைகள், மற்ற வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.