வணிகம்

ஐரோப்பிய சந்தைகள் சரிவால் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் ரூ.6.59 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐரோப்பிய சந்தை

களின் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இதன் எதிரொலியால் இந்தியச் சந்தைகளும் நேற்று சரிவைச் சந்தித்தன. இந்தச் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.6.59 லட்சம் கோடி ஒரே நாளில் இழந்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று 2.87 சதவீதம் அல்லது 1,400 புள்ளிகள் இறக்கம் கண்டு 45,553.96 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 2.38 சதவீதம் அல்லது 327 புள்ளிகள் இறக்கம் கண்டு 13,433 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது.

இந்தியச் சந்தைகளில் பங்கு விற்பனை அதிகரித்ததால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.6.59 லட்சம் கோடி அளவில் குறைந்தது. பிஎஸ்இயில் 2,433 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன. 592 பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில் 167 பங்குகள் மாற்றமில்லாமல் வர்த்தகமாயின.

தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 4 சதவீத அளவிலும், தனியார் வங்கி 2.2 சதவீதமும் இறக்கம் கண்டுள்ளன. மெட்டல் குறியீடு 3.8 சதவீதமும் ஆட்டோ மொபைல் குறியீடு 2.8 சதவீதமும் இறக்கம் கண்டன.

மேலும் கரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்து எல்லைகள் மூடப்பட்டதால் விமான சேவைத் துறை பங்குகள் அழுத்தம் கண்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் பங்கு 9.5 சதவீதம் குறைந்து 91.90க்கு வர்த்தகமானது. இன்டர்குளோப் ஏவியேஷன் 6.4 சதவீதம் இறக்கம்கண்டு ரூ.1,543.90க்கு வர்த்தக மானது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் வீழ்ந்துள்ளதால் எண்ணெய் துறை பங்குகளும் இறக்கம் கண்டன. ஓஎன்ஜிசி 7.6 சதவீதமும், இந்தியன் ஆயில் 6.8 சதவீதமும், பாரத் பெட்ரோலியம் 5.3 சதவீதமும் இறக்கம் கண்டன.

இவை தவிர முக்கியப் பங்குகளான என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ, இண்டஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகியவையும் இறக்கம் கண்டுள்ளன.

ஏற்றம் கண்ட பங்குகள்

அதேசமயம் இன்போசிஸ், ஹெச்சிஎல், நெஸ்லே ஆகியவை ஏற்றம் கண்டன. இந்தியப்பங்குச்சந்தைகள் நவம்பர் மாதத்தில் இருந்து நல்லஏற்றத்தைச் சந்திந்து வந்தநிலையில் தற்போது இறக்கம்கண்டிருப்பது முதலீட்டாளர் களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT