இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் ஆண்டுக்கு 1.25 லட்சம் டாலர் வரை முதலீடு செய்யலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முன்னர் இது 75 ஆயிரம் டாலராக இருந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் ஸ்திரமான நிலை உருவானதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் லாட்டரி, மார்ஜின் டிரேடிங் உள்ளிட்ட தடை செய்யப்பட்டவற்றில் முதலீடு செய்யக் கூடாது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு அளவை 2 லட்சம் டாலரிலிருந்து 75 ஆயிரம் டாலராக ஆர்பிஐ குறைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஸ்திரமற்ற நிலை ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்தது.
செவ்வாய்க்கிழமை வெளி யான நிதிக் கொள்கையில் இந்தியர் அல்லாத வெளி நாட்டினர் (பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர்கள் கிடையாது) இந்தியாவிலிருந்து செல்லும்போது ரூ. 25 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளது. அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் வரும்போது செலவுக்கு உதவும் வகையில் இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளி நாட்டினர் இந்திய கரன்சியை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதேசமயம் வெளி நாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் ரூ. 10 ஆயிரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.