தொடர்ந்து இரண்டு நாள்களாக ஏற்றம் பெற்று வந்த மும்பை பங்குச் சந்தை புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. வர்த்தகம் முடிவில் 52 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 24805 புள்ளிகளாகக் குறைந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 13 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7402 புள்ளிகளானது.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது ஏறுமுகம் கண்ட பங்குச் சந்தை வர்த்தகம் முடிவில் சரிவைச் சந்தித்தது.ஏறுமுகத்தில் இருந்தபோது பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்றதால் சரிவு தவிர்க்க முடியாததானது.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 15 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இப்பட்டியலில் அதிகம் விரும்பப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் அடங்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1.27 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1.26 சதவீதமும், தொழில்நுட்பத்துறை பங்குகள் 1.01 சதவீதமும், எப்எம்சிஜி பங்குகள் 0.23 சதவீதமும் சரிந்தன. ரியால்டி, நுகர்வோர் பொருள் தயாரிப்பு, மின்சாரம், ஆட்டோமொபைல் வங்கித்துறை பங்குகள் ஏற்றம் பெற்றன.
சர்வதேச அளவில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டபோதிலும் உலோகத்துறை பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாகவே இருந்தது. டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 3.48 சதவீதம் உயர்ந்தன.அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 575 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கியிருந்தன். உரத்துக்கு வழங்கப்படும் மானியத்தை அரசு சீரமைக்கப் போவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து உர நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 3.57 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹிண்டால்கோ (3.48%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (2.26%), டாடா ஸ்டீல் (2.06%),. பஜாஜ் ஆட்டோ (1.56%), எஸ்பிஐ (1.48%), ஆக்ஸிஸ் வங்கி (1.32%), மாருதி சுஸுகி (1.30%), லார்சன் அண்ட் டியூப்ரோ (1.18%) அளவுக்கு உயர்ந்தன.
பங்குச் சந்தையில் மொத்தம் 2,127 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. 921 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 97 நிறுவனங்களின் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மொத்த வர்த்தகம் ரூ. 4,467.78 கோடியாகும்.
மும்பை பங்குச் சந்தையில் வெல்ஸ்பன் பங்கு விலை 14 சதவீத அளவுக்கு உயர்ந்தது. இக்குழும நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குளை வாங்கியதே இதற்குக் காரணமாகும். வெல்ஸ்பன் பங்கு விலை ரூ. 98-க்கு விற்பனையானது. ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானின் நிக்கி 0.22 சதவீதம் உயர்ந்தது. சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் 0.60 சதவீதம் சரிவு காணப்பட்டது.
இதேபோல ஹாங்காங்கின் ஹாங்செங் பங்குச் சந்தை 0.66 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் ஏற்ற, இறக்க நிலையே காணப்பட்டது.