போட்டி நிறைந்த தொலைத் தொடர்புத் துறையில் ஒருங் கிணைப்பு நடைபெறுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் வர்த்தகம் செய்வதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஆர்காம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஏடிஏஜி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் குழும நிறுவனங் களின் (ஏடிஏஜி) ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வுடன் தனது நிறுவனம் ஸ்பெட்க்ரம் அலைகற்றையை பகிர்ந்து கொள்வது குறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது இந்த துறையின் போக்கினை மாற்றக்கூடியது. இதற்கான பலன்கள் வரும் காலத்தில் இருக்கும்.
இதன் மூலம் ஆர்.காம் வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்த முடியும். ஸ்பெக்ட்ரம் பகிர்வு குறித்து அர சாங்கம் விரைவில் விதிமுறைகளை வெளியிட இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. தற்போது இரு நிறுவனங்களும் செல்போன் கோபுரங்கள், ஆப்டிக் பைபர் உள்ளிட்டவற்றை 2013-ம் ஆண்டில் இருந்து பகிர்ந்து கொள்கின்றன.
ஏற்கெனவே இருந்த ரிலையன்ஸ் இன்பிராடெல் டவர் நிறுவனத்தின் 95 சதவீத பங்குகள் விற்கப்பட்டன. இந்த நிலையில் தனியாக ஒரு டவர் நிறுவனம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சில தேவையில்லாத ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.காம் நிறுவனத்தின் கடனை குறைத்து நிதிநிலை அறிக்கையை பலப்படுத்த முடியும்.
எம்.டி.எஸ் இணைப்பு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் எம்டிஎஸ் என்னும் பெயரில் இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. எம்டிஎஸ் நிறுவனத்துக்கு 8 முக்கிய வட்டாரங்களில் அனுமதி உள்ளது. இவை நீண்ட காலத்துக்கு அனுமதி பெறப்பட்டிருக்கின்றன.
நிப்பான் லைப்
நிறுவனத்தின் நிதிச்சேவை பிரிவின் வளர்ச்சி நன்றாக இருப்பதால் ஜப்பானை சேர்ந்த நிப்பான் நிறுவனம் ரிலையன்ஸ் லைப் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் தங்களுடைய முதலீட்டை உயர்த்த முன்வந்திருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
ரிலையன்ஸ் லைப் நிறுவனத் தில் நிப்பான் 26 சதவீதம் பங்கு வைத்திருக்கிறது. இதனை 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் மியூச்சுவல் நிறுவனத்தில் 35 சதவீதம் பங்கினை 49 சதவீதமாக உயர்த்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இவை நடப்பு நிதி ஆண்டுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில், ஹவுசிங் பைனான்ஸ் கடனை 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வழங்க ரிலை யன்ஸ் கேபிடல் முடிவு செய்திருக் கிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் ஜப்பானை சேர்ந்த சுமிடோமோ மிட்சுயி டிரஸ்ட் வங்கியுடன் சேர்ந்து வங்கி தொடங்க லாம். மற்ற முக்கியம் இல்லாத தொழில்களில் இருக்கும் முத லீட்டை பகுதி அளவுக்கு விற்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மீடியா உள்ளிட்ட துறைகளில் பங்கினை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.