தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டம் 44ஏபி பிரிவின் கீழ் தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தணிக்கை செய்யப்படாத கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 வரையாகும்.
இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்கள், ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் ஆகியோர் தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு அனைத்துமே மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதுபோல தணிக்கை செய்யப்பட்ட நிறுவன கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேர் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 15 தேதிக்கு மேல்தான் வருமான வரி அமைச்சகம் அப்லோட் செய்தது.
இதனால் கூடுதல் அவகாசம் கேட்டு தணிக்கையாளர் சங்கம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கேட்டுக் கொண்டது. இந்நிலையில் மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில தணிக்கையாளர் சங்கம் வழக்கு பதிவு செய்தது.
சாஃப்ட்வேர் அப்லோட் செய்ததே காலதாமதம் என்பதால் அரசு கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்படாது என முன்னர் தெரிவித்திருந்த நிதி அமைச்சகம் தற்போது தனது பிடிவாதத்தைத் தளர்த்தி அவகாசம் அளித்துள்ளது.
இதனால் நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள் இந்த நஷ்ட விவரத்தை அடுத்த நிதி ஆண்டுக்குக் கொண்டு செல்ல வழி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் காலதாமதமாக வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் மீது விதிக்கப்படும் அபராதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.