21-ஆம் நூற்றாண்டின் இயற்கை மருத்துவத்திற்கான மையமாக பூனேவில் நிசர்க் கிராம் வளாகம் விளங்குவதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பூனேவுக்கு அருகில் உள்ள உருளி கன்ச்சன் கிராமத்தில் ‘நிசர்க் உப்ச்சார்’ ஆசிரமத்தில் 1946-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய புகழ் பெற்ற இயற்கை மருத்துவ முகாமை நினைவுபடுத்தும் விதமாக, புனேவில் அமையவுள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் புதிய வளாகம் நிசர்க் கிராம் என்று அழைக்கப்படும்.
பாபு பவனில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் தற்போதைய வளாகத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த புதிய நிறுவனம், எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
21-ஆம் நூற்றாண்டின் இயற்கை மருத்துவத்திற்கான மையமாக விளங்கவுள்ள இந்த வளாகத்தில் கற்பிக்கப்படவுள்ள இயற்கை மருத்துவ படிப்புகளின் பாடத்திட்டங்களில் பல்வேறு புதுமையான விஷயங்கள் புகுத்தப்படும்.
இயற்கை மருத்துவம், அதை சார்ந்த துறைகளில் இளநிலை, முதுநிலை படிப்புகள் நிசர்க் கிராமில் கற்பிக்கப்படும். இதற்காக, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வழங்கப்பட்டு வரும் இயற்கை மருத்துவப் படிப்புகளை தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இது வரை இல்லாத வகையில் மருத்துவப் படிப்புகள் நிசர்க் கிராமில் கற்பிக்கப்படுவதன் மூலம் நாட்டின் இயற்கை மருத்துவக் கல்வியும், யோகா கல்வியும் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.