நடப்பு காரீப் பருவத்தில், நெல் கொள்முதலுக்காக 30.84 கோடி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.61306.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. இம்மாதம் 2ம் தேதி வரை, மொத்தம் 324.71 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 271.57 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும், தமிழகம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களிடமிருந்து 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பும், எண்ணெய் வித்துக்களும் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி வரை, 114922.58 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தானைச் சேர்ந்த 65,907 விவசாயிகளுக்கு ரூ.618.95 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 5089 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய், ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3961 தமிழக, கர்நாடக விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.