தொடர்ந்து 2-வது மாதமாக கடந்த நவம்பர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.05 லட்சம் கோடி இருந்த நிலையில், கடந்த நவம்பரிலும் ரூ.1.04 கோடியாக (ஒருலட்சம் கோடியைக் கடந்துள்ளது) உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 491 கோடியாக இருந்த நிலையில் அதைவிட, 2020ம் ஆண்டு நவம்பரில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாக ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது, உள்நாட்டுபரிமாற்றம் மூலம் கிடைக்கும் வரிவருவாய் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த வருவாயைவிட 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020, நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ.ஒரு லட்சத்துக்கு 4ஆயிரத்து 963 கோடியாக இருக்கிறது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.19 ஆயிரத்து 189 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.25 ஆயிரத்து 540 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.51 ஆயிரத்து 992 கோடியாகும். இதில் செஸ் ரூ.8,242 கோடியாகும்.
கடந்த 2019-20ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி 12 மாதங்களில் 8 மாதங்கள் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலானது. ஆனால், நடப்பு நிதியாண்டில், கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.32,172 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.62,151 கோடியாகவும், ஜூனில் ரூ.90,917 கோடியாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.95,480 கோடியாகவும் இருந்தது.
அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்து, ரூ.1,05,155 கோடியாக உயர்ந்தது. நவம்பரில் ரூ.1.04,963 கோடியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.