சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களில் 8-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் உயர்த்தியுள்ளன.
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 24 பைசாவும், டீசல் 27 பைசாவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.89 பைசாவிலிருந்து ரூ.82.13 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.71.86 பைசாவிலிருந்து ரூ.72.13 பைசாவாக அதிகரித்துள்ளது.
கடந்த 20-ம் தேதியிலிருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.07 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.1.67 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த 8 நாள் விலை உயர்வுக்கு முன்பாக, பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் மாற்றப்படாமலும், டீசல் விலை அக்டோபர் 22-ம் தேதி முதல் மாற்றப்படாலும் இருந்து வந்தது.
இதேபோல, மார்ச் 17 முதல் ஜூன் 6-ம் தேதி வரையில் 85 நாட்களும், ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போது, தொடர்ந்து 8-வது நாளாக விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 பைசா அதிகரித்து ரூ.85.12 பைசாவாக உள்ளது. டீசல் லி்ட்டருக்கு 26 பைசா அதிகரித்து, லிட்டர் ரூ.77.56 பைசாவாக விற்கப்படுகிறது.