வணிகம்

உற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ் கோயல் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இந்திய தொழில் துறைக்கு அமைச்சர் பியுஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் உரையாடிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

தரம் மிகுந்த, திறமையான உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் சேவை வழங்குபவர் என்னும் அங்கீகாரத்தை நாடு பெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் கலந்துரையாடல்களை நடத்துமாறு தொழில்துறையினரை அமைச்சர் வலியுறுத்தினார்.

இவை துறை ரீதியாகவோ அல்லது மண்டல அளவிலோ நடத்தப்படலாம் என்று கூறிய கோயல், இவ்வாறு கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் மேற்கண்டவற்றைப் பற்றிய தகவல்களையும், அறிவையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார்.

முக்கிய நிறுவனங்களின் லாபம் இரண்டாம் காலாண்டில் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கோவிட் காலகட்டத்தை தங்களை செப்பனிட்டுக் கொள்ளவும், பொருட்களின் வகைகள், தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்திய தொழில் துறையினர் பயன்படுத்திக் கொண்டதை இது காட்டுவதாக கூறினார்.

'கடினமான காலகட்டத்தில் உறுதியையும், நம்பிக்கையையும் இந்திய தொழில் துறை வெளிப்படுத்தியது. பெருந்தொற்றை எதிர்த்து நாடு போராட இது உதவியது. மீண்டெழுவதற்கான வலிமையான அறிகுறிகளை பொருளாதாரம் வெளிப்படுத்துகிறது," என்று கோயல் கூறினார்.

SCROLL FOR NEXT