வணிகம்

தேசிய விமான போக்குவரத்து வரைவு கொள்கை வெளியீடு

செய்திப்பிரிவு

மத்திய அரசு தேசிய விமான போக்கு வரத்து வரைவு கொள்கையை (என்சிஏபி 2015) நேற்று வெளியிட்டது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் இணை அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

இதன் மூலம் சிறு நகரங்களில் உள்ள நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்கக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

நாடு முழுவதும் 300 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அதிக சோதனை இல்லாத விமான நிலையங்களாக இது இருக்கும் இந்த விமான நிலையங்களை அமைக்க அனைத்து டிக்கெட்களிலும் 2 சதவீத வரி விதிக்க முடிவு செய்திருக்கிறது. மண்டல இணைப்பு திட்டத்தின் (ஆர்சிஎஸ்) மூலம் இவை கொண்டு வரப்பட இருக்கிறது. தோராயமாக வருடத்துக்கு 1,500 கோடி ரூபாய் இதன் மூலம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி பயணிகள் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது அடுத்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த விமான நிறுவனங்களில் ஒரு மணிநேரத்துக்குள் செல்லும் விமானங்கள் இயக்கப்படும். அனைத்து வரிகள் உள்பட அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2014-15ம் ஆண்டு 7 கோடி டிக்கெட்கள் இந்தியாவில் (உள்நாட்டு போக்குவரத்தில்) விற்பனையானது. நடுத்தர மக்கள் பயணம் செய்யும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 30 கோடி அளவுக்கு உயரும். கட்டணங்களை குறைப்பதன் மூலமே இது சாத்தியம் என்று கூறப்பட்டிருக்கிறது. வரும் 2022-ம் ஆண்டு 30 கோடி டிக்கெட்களும், 2027-ம் ஆண்டு 50 கோடி டிக்கெட்களும் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தவிர இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என்றால் ஐந்து வருடம் செயல் பட்டிருக்க வேண்டும், அவற்றிடம் 20 விமானங்களும் இருக்க வேண்டும் (5/20) என்ற விதி இருந்தது. இது தொடரலாம். அல்லது நீக்கலாம் அல்லது புள்ளிகள் அடிப்படை அனுமதி வழங்கலாம் என மூன்று யோசனை களை வழங்கி இருக்கிறது. இது குறித்த கருத்துகளையும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் ஹெலிகாப்டர்கள் இயக்க சாதகமான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT