இ-காமர்ஸ் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் 10 மணி நேரத்தில் 10 லட்சம் பொருட்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில் ‘பிக் பில்லியன் டே’ விழாக்கால விற்பனையில், இந்திய அளவில் 60 லட்சம் பேர் தங்களது இணையதளத்துக்கு வருகை புரிந்ததாகவும், ஒரு நொடிக்கு 25 பொருட்கள் விற்பனை ஆனது என்றும் கூறியுள்ளது.
இந்த விற்பனையில் பெங்களூரு, டெல்லி, சென்னை நகரங்கள் முன்னணியில் இருந் துள்ளது. இதர மெட்ரோ நகரங்களிலிருந்தும் அதிக வாடிக்கையாளர்கள் தளத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.
மேலும் லூதியானா, லக்னோ, போபால் போன்ற மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வருகை விகிதம் அதிகமாக இருந்ததாக பிளிப்கார்ட் கூறியுள்ளது.
பேஷன் விற்பனை பிரிவைப் பொறுத்தவரை காலணி வகைகள், ஆண்களுக்கான உடைகள் மற்றும் ஆண்களுக்கான இதர பேஷன் பொருட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. ஆண்களுக்கான பேஷன் பொருட்கள் விற்பனையை ஒப்பிடுகிறபோது இதர பேஷன் பிரிவுகளைவிட அதிக தேவை கொண்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.
நேற்றைய பேஷன் விற்பனையை பொறுத்தவரை அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம். அதுபோலவே 10 லட்சம் பொருட்களை விற்பனை செய்துள்ளோம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் எங்களது செயலியை 16 லட்சம் பேர் புதிதாக தரவிறக்கம் செய்துள்ளனர் என்று நிறுவனத்தின் இணைய வர்த்தக பிரிவுத் தலைவர் முகேஷ் பன்சால் குறிப்பிட்டார்.
பிளிப்கார்ட் இணையதளம் புத்தகம், செய்தி, நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், லைப் ஸ்டைல் உள்ளிட்ட 70 பிரிவுகளிள் 3 கோடி பொருட்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. நிறுவனத்தில் தற்போது 33,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 5 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் உள்ளனர். தினசரி 1 கோடி பேர் இணையதளத்துக்கு வருகை புரிகின்றனர். மாதத்துக்கு 80 லட்சம் பொருட்களை டெலிவரி செய்துவருகிறது.