வணிகம்

உடான் திட்டம்; பின்தங்கிய பகுதிகளுக்கு விமானம்: கலபுரகி - ஹின்தோன் நேரடி விமான சேவை தொடக்கம்

செய்திப்பிரிவு

கர்நாடகாவின் கலபுரகி முதல் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹின்தோன் விமான நிலையம் வரையிலான முதல் நேரடி விமான சேவை பிராந்திய இணைப்புத் திட்டமான உடானின் கீழ் இன்று தொடங்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உடான் திட்டத்தின் கீழ் நாட்டில் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வரை உடான் திட்டத்தின் கீழ் 295 வழித்தடங்கள், ஐந்து ஹெலிகாப்டர் நிலையங்கள் உட்பட 53 விமான நிலையங்கள், 2 நீர் விமான நிலையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.

ஸ்டார் ஏர் விமான நிறுவனம், வாரத்திற்கு மூன்று சேவைகளை கலபுரகி- ஹின்தோன் இடையே இயக்கும்.

இதுவரை நேரடி விமான சேவை இல்லாததால் கலபுரகி, ஹின்தோன் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். சாலை மூலமாகவோ, ரயில் வழியாகவோ இந்தப் பகுதிகளை அடைய 25 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தேவைப்படும். தற்போது இந்த நேரடி விமான சேவையின் மூலம் பயண நேரம் 2 மணி 20 நிமிடங்களாகக் குறையும்.

SCROLL FOR NEXT