கோப்புப்படம் 
வணிகம்

வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்திக்கிறது: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

பிடிஐ

வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்தநிலைக்குள் இந்தியா செல்கிறது. அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது மைனஸில் சென்றதையடுத்து, மந்தநிலையை எதிர்கொள்கிறது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 8.6 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில்தான் மத்திய அரசு 2-வது காலாண்டின் புள்ளிவிவரங்களை அறிவிக்க இருக்கிறது என்றாலும், பல்வேறு பொருளாதார ஆய்வுகள் முன்கூட்டியே கணித்துவிட்டன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு லாக்டவுனை அறிவித்தது. இந்த லாக்டவுனால் நிறுவனங்கள், தொழில்கள், வர்த்தகம், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

தொடர்ந்து ஜூலை-செப்டம்பர் மாத 2-வது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிடும் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் 2-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும், எத்தனை சதவீதம் வளர்ச்சி அடையும் எனும் கணிப்புகள் தரப்பட்டிருந்தன. அதன்படி, மைனஸ் 8.6 சதவீதம் வீழ்ச்சி அடையும்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், நிதிக்கொள்கை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், “ 2020-21 ஆம் நிதியாண்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா டெக்னிக்கல் ரிசஸனுக்குள் நுழைகிறது. அதாவது பொருளாதார மந்தநிலைக்குள் இந்தியா செல்கிறது.

2-வது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில்தான் செல்லும். தொடர்ந்து 2 காலாண்டுகளாக, ஒரு நிதியாண்டின் முதல் பாதியே மைனஸில்தான் செல்கிறது. பொருளாதார மந்தநிலையிலிருந்து மே, ஜூன் மாதத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.

ஏப்ரல்- ஜூன் காலாண்டில் ஹவுஸ்ஹோல்ட் பைனான்சியல் சேவிங்ஸ் எனப்படும் சேமிப்பு 21.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதாவது ஹவுஸ்ஹோல்ட் பைனான்சியல் சேவிங்ஸ் எனப்படுவது கரன்ஸி, வங்கி டெபாசிட், கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதிப் பத்திரங்கள், பென்ஷன் நிதி, காப்பீடு, சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு ஆகியவற்றைக் குறிக்கும். இந்த விஷயங்களில் மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இது 7.9 சதவீதமாகத்தான் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கரோனா அச்சம், ஊதியம் குறைவு ஆகியவை காரணமாக, சேமிப்பை மக்கள் அதிகப்படுத்தும்போது, செலவு செய்வதைக் குறைக்கிறார்கள். வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கும், கடன் வழங்குவதற்கும் இடையே பெரிய இடைவெளி உருவானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT