தினேஷ் குமார் காரா 
வணிகம்

அடுத்த நிதி ஆண்டில் பொருளாதாரம் மீண்டு விடும்: எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா நம்பிக்கை

செய்திப்பிரிவு

நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதி ஆண்டில் பழைய நிலைக்குத் திரும்பும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலை
வர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக மைனஸ் நிலைக்கு சரிந்த பொருளாதாரம் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்திய பொருளாதாரம் மிகவும் முதிர்ச்சியான பொருளாதாரம். பொருளாதார மீட்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெங்கால் தொழில் வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர்,
2021 ஏப்ரல் நிதி ஆண்டில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும் என்று குறிப்பிட்டார். வரும் நிதி ஆண்டு மாற்றத்துக்கான, வளர்ச்சிக்கான நிதிஆண்டாக அமையும். அடுத்து வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி வசப்படுவதோடு அது ஸ்திரமானதாகவும் அமையும்.

சரிவில் இருந்து மீண்டு வரும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியது. நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டிலேயே வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளது. நிறுவனங்கள் முதலீடு செய்யும் நடவடிக்கை தொடங்குவதற்கு சில காலம் பிடிக்கும். தற்போதைய சூழலில் பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும்தான் முதலீடுகளை மேற்கொள்ளமுடியும். இதன் மூலம் முதலீட்டுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள் தற்போது கடன் வாங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. குறுகிய கால ஏற்பாடாக உள்ள நிதிஆதாரங்கள் மூலம் தற்போதைய நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றார். கரோனா ஊரடங்கு காலத்திலும் உருக்கு மற்றும் சிமென்ட்துறைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும், ஏற்றுமதிசந்தையை எதிர் நோக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT