தங்க சேமிப்பு திட்டம் மற்றும் அசோக சக்கரம் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் தீபாவளிக்கு முன்பாகவே வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய பொருளாதாரம் புதிய திசையில் செல்லும் என்று மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் ‘மான் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். நேற்று மோடி 13 வது உரை நிகழ்த்திய பொழுது இதை தெரிவித்துள்ளார். தங்க சேமிப்பு திட்டம் மட்டுமல்லாது தங்க கடன் பத்திரம் திட்டமும் தொடங்கப்பட இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:
நமது நாட்டு மக்களின் வாழ்க்கையில் தங்கம் இரண்டற கலந்துவிட்டது. மக்களுக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பாக தங்கம் இருக்கிறது. தங்கத்தின் பிணைப்பை எந்த ஒரு மக்களும் குறைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தங்கத்தை வைத்திருப்பதன் மூலம் அது பயன்பாட்டில் இல்லாத பணம் ஆகி விடுகிறது. தங்கம் அதிக பொருளாதார வலிமை வாய்ந்தது. நாட்டின் பொருளாதார சொத்தாக தங்கத்தை மாற்ற ஒவ்வொரு குடிமகனாலும் முடியும்.
தங்க சேமிப்பு திட்டத்தின் மூலம் உங்கள் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம். நீங்கள் செய்துள்ள தங்க டெபாசிட்டிற்கு ஏற்ப வட்டி வழங்கப்படும்.
இது பழைய முறையை போன்றுதான். மக்கள் தங்கத்தை பத்திரமாக லாக்கரில் வைப்பதற்கு வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வங்கி உங்கள் தங்க சேமிப்பிற்கு வட்டி வழங்கும். இப்போது சொல்லுங்கள் தங்கம் ஒரு சொத்தாக இருக்க வேண்டாமா? இத்திட்டத்தின் மூலம் உங்களால் தங்கத்தை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள முடியும் என்று மோடி பேசினார்.
மேலும் தங்க கடன் பத்திரம் திட்டத்தை பற்றி பேசும் பொழுது, மக்கள் தங்கத்தை கட்டியாக வாங்காமல் ஒரு பேப்பரில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் அந்த பேப்பரை கொடுத்து பணமாகவோ அல்லது தங்கமாகவோ வாங்கி கொள்ளலாம் என்றார். இதன் மூலம் மக்கள் தங்கத்தை பத்திர படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் அசோக சக்கரம் பொருத்தப்பட்ட தங்க நாண யங்களை வெளியிடுவதில் பெருமைபடுகிறேன். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக நாம் வெளிநாட்டு தங்க நாண யங்களைதான் பயன்படுத்தி வருகிறோம். ஏன் நமக்கென்று சுதேசி சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இல்லை? ஆனால் இன்னும் சில வாரங்களில் நமக்கென்று நாணயங்கள் வர இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நம் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி புதிய திசையில் செல்லும். இதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டுகிறேன் என்று மோடி கேட்டார்.
வீடுகளில் மற்றும் கோயில் களில் இருக்கும் 20,000 டன் தங்கத்தை இந்தத் திட்டங்களின் மூலம் ஒன்றுதிரட்டதான் அரசு இத்திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிகிறது.
அசோக சக்கரம் பொறிக் கப்பட்ட நாணயங்கள் 5 கிராம், 10 கிராம், 20 கிராம் ஆகிய எடையில் கிடைக்கும் பிரிண்டிங் மற்றும் மிண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இந்த நாணயங்களை அச்சிட இருக்கிறது. 5 கிராமில் 20,000 நாணயங்களும், 10 கிராமில் 30,000 நாணயங்களும் புழக்கத்தில் கிடைக்கும் எனவும், இதை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்க கடன் பத்திர திட்டத்தின் மூலம் ரூ.15,000 கோடி திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது.