கிராமங்களோடு ஒப்பிடும்போது, நகரங்களே பொருட்களின் விலைக்குறைவினால் அதிக நன்மை அடைந்து வருகின்றன.
பணவீக்கம் கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்தாலும் அவற்றுக்கிடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. நகரங்களைவிட, கிராமப்புறங்களில் விலைவாசி மிகவும் மெதுவாகவே குறைந்து வருகிறது. இதனால் இரண்டுக்குமான இடைவெளி, கடந்த ஒரு வருடத்தில் இரண்டு மடங்காகி இருக்கிறது என்கிறது ஹெச்எஸ்பிசி ஆய்வு. இதன் முடிவுகள் பின்வருமாறு:
கடந்த பல மாதங்களாகவே, சந்தையில் பொருட்களின் விலை குறைந்தாலும், அதன் பலன் கிராமத்துக்கும், நகரத்துக்கும் சமமாகப் போய்ச் சேரவில்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கு 6 சதவீதம் என்னும் போது, நகரங்களில் பணவீக்கம், 4.5 % ஆக இருக்கிறது. ஆனால் கிராமத்தில் இந்த சதவீதம் இலக்கைத் தாண்டி 6.5 % ஆக இருக்கிறது.
இந்த வேறுபாடு உணவு, எரிபொருள், போக்குவரத்து மற்றும் மைய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்டிருக்கிறது. இதில் முக்கியமானது எரிபொருள் மற்றும் போக்குவரத்தால் ஏற்படுவது.
ஆய்வின்படி, கிராமப்புற இந்தியா உலகளாவிய பணவாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் விறகு, சாண எரிவாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. எல்.பி.ஜி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நகர்ப்புற இந்தியா, அவற்றின் விலை குறைப்பை அனுபவிக்கிறது.
நகர்ப்புற இந்தியாவோடு ஒப்பிடும்போது, கிராமப்புறத்தில் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. போக்குவரத்து இணைப்புகள் வலிமையற்றதாகவும், அவை விநியோகிக்கப்படும் வழிகள் பற்றாக்குறையாகவும் இருக்கின்றன.
இரண்டு வருட பஞ்சத்துக்கு பிறகும், உணவுப்பொருட்களின் மீதான விலை அப்படியேதான் இருக்கிறது. குறைவான நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடிவதே இதற்கான காரணமாக இருக்கும். ஆனாலும், கிராமங்களோடு ஒப்பிடும்போது, நகரங்களே விலைக் குறைவினால் அதிக நன்மை அடைந்துவருகின்றன. ஒழுங்கான சந்தைப்படுத்தல் இல்லாத காரணத்தால், நகரத்தைக் காட்டிலும், கிராமங்களில் காய்கறிகள் மற்றும் எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன.
இந்தியாவின் பெரும்பான்மைத் தேவைக்கான உணவு, கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் திடீர் விலை உயர்வின் காரணமாக, கிராமங்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. சீக்கிரத்தில் கெட்டுப்போகும் பொருட்களான அசைவம் மற்றும் மீன் ஆகியவை, முறையான பதப்படுத்துதல் இல்லாமல், விரைவிலேயே வீணாகின்றன.
நகரத்துடனான இடைவெளியைக் குறைக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை கிராமங்கள் அடையவும் கிராமக் கட்டமைப்புகளில் அதிக முதலீடும், முறைப்படுத்தப்பட்ட விவசாய சீர்திருத்தங்களும் அவசியத் தேவை.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில்:க.சே. ரமணி பிரபா தேவி