சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 25 லட்சம் விண்ணப்பதாரர்களில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.
பிரதமர் ஸ்வநிதி திட்டம் எனப்படும் பிரதமர் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம், கோவிட்-19 பெருந்தொற்று பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வீதியோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடனுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு ரூ. 10,000 விதம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்வநிதி திட்டத்தின் கீழ், நகர்ப்புற வீதியோர வியாபாரிகள் தொழில் முதலீட்டு கடனாக ரூ.10,000 பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். இந்தக் கடனை ஓராண்டில் மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். இக்கடனுக்கு வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு வங்கிகள் ஆகியவை எவ்வித உத்தரவாதத்தையும் கேட்பதில்லை.
உரிய காலத்தில் திருப்பி செலுத்தப்படும் நிகழ்வில், மேலும் அடுத்த சுற்று கடனும் வழங்கப்பட்டு சலுகை நீட்டிப்பு அளிக்கப்படும். உரிய காலத்திற்கு முன்னதாக கடனைத் திருப்பிச் செலுத்துவோரிடம் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ், கடனுதவி பெறுவோர் 7 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கு தகுதி பெறுவர்.
வீதி வியாபாரிகள் இச்சலுகையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31, மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். டிஜிடல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மாதாந்திர கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.