வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட கோஏர் திட்டம்

பிடிஐ

வாடியா குழுமத்தை சேர்ந்த பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான கோஏர் நடப்பு நிதி ஆண்டில் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லாபமீட்டி வரும் இரண்டு விமான நிறுவனங்களில் கோஏர் நிறுவனமும் ஒன்று. இன்னொரு நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் ஐபிஓ வெளியிட கோஏர் திட்டமிட்டிருக்கிறது.

இதுகுறித்து விரைவில் செபியிடம் விண்ணப்பத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.

இருந்தாலும் எவ்வளவு தொகைக்கு ஐபிஓ வெளி யிடப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து கோஏர் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, சந்தையில் நிலவும் கருத்துகளுக்கு பதில் கூற இயலாது என்று மறுத்துவிட் டனர்.

இந்த நிறுவனத்தில் 19 ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. 20-வது விமானத்தை அடுத்த வருடம் ஏப்ரலில் இயக்க இருக்கிறது. தற்போதைய விதிமுறைகளின் படி உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும் எனில், ஐந்து வருடங்கள் சந்தையில் இருக்க வேண்டும் தவிர 20 விமானங்கள் இயக்கப்பட வேண்டும்.

ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகையை வைத்து சர்வதேச நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த கோஏர் திட்டமிட்டிருப்பதாக தெரி கிறது.

SCROLL FOR NEXT