2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
2020 அக்டோபர் 16 முதல் 22-ம்தேதி வரை ஒருங்கிணைக்கப்படும் இந்தியா-சர்வதேச உணவு & வேளாண் வாரத்தை இணையம் வாயிலாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு பதப்படுத்தும் தொழில்துறை, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய தோமர், இந்திய உணவு சந்தையில் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்கு 32% இருப்பதாக கூறினார். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் விவசாயத்துறை மற்றும் உணவு துறையில் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதே இந்த வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்பத்தின் நோக்கமாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்த வழியில்தான், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிக்கும் பிரதமர் நரேந்திரமோடியின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு மற்றும் வேளாண் துறையின் வளங்கள் குறித்து பேசிய தோமர், இந்தியாவின் வேளாண் மற்றும் கிராமப்பொருளாதாரம் வலுவானதாக இருக்கிறது என்றார். முறையான சந்தைப்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவை வேளாண்துறையில் பெரிய வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் என்றும், இந்தப் பாதையை நோக்கி பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 3.4 % இருக்கிறது என்று தெரிவித்த அவர், கோவிட் தருணத்தில் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறை பெரும் பங்கு ஆற்றியதாகவும் தோமர் கூறினார். இந்த நிகழ்வை முன்னிட்டு அன்ன தேவோ பவா என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தை தோமர் தொடங்கி வைத்தார்.
உணவின் மீதான மதிப்பை உணரும் வகையில் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அவர், உணவு வீணாவதை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.