வணிகம்

தொழில் கலாச்சாரம்: வியட்நாமில் வர்த்தக வாய்ப்புகள் ஏராளம்

எஸ்.எல்.வி மூர்த்தி

கிரேக்க, எகிப்திய இதி காசங்களில் ஃபீனிக்ஸ் என ஒருவகைப் பறவை உண்டு. மிக அழகான பறவை. ரத்தச் சிவப்பு நிறம், தங்கமாய்த் தகதகக்கும் இறகுகள். கழுகுபோல் கம்பீரம். தோற்றம் மட்டுமா அழகு? குயிலைத் தோற்கடிக்கும் இனிமைக் குரல். இத்தனையும் கொடுத்த கடவுள் நீண்ட ஆயுளும் கொடுத்தான். ஃபீனிக்ஸ் பறவையின் ஆயுள் 500 ஆண்டுகள்.

தன் இறுதிக் காலம் எப்போது வருகிறது என்று ஃபீனிக்ஸ் பறவைக்குத் தெரியும். அப்போது நறுமணம் கமழும் தாவரத் தண்டுகள், வாசனைப் பொருட் கள் ஆகியவற்றால் கூடு கட்டும். அந்தக் கூட்டைத் தீயிடும். எரியும் நெருப்பில் குதிக்கும். சாம்பலாகும். அப்போது நடக்கும் ஒரு ஆச்சரியம். கனன்று கொண்டிருக்கும் சாம்பலி லிருந்து புதிய ஃபீனிக்ஸ் எழுந்து வரும், அதிக அழகோடு, அதிகத் தகதகப்போடு. இதை ஃபீனிக்ஸின் எழுச்சி (Rise of the Phoenix) என்று சொல்வார்கள்.

சில நாடுகளும் இப்படித்தான். இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஜப்பானின் பொருளாதாரம் தரைமட்டமானது. ஆனால், அடுத்த பதினந்து ஆண்டுகளுக்குள் ஜப்பான் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகிவிட்டது. இதேபோல், 1955 முதல், 1975 வரை நடந்த உள்நாட்டுப் போர் வியட்நாமைச் சிதிலமாக்கியது. இதிலிருந்து கம்பீரமாக எழுந்துவந்திருக்கிறது. வியட்நாம் இன்னொரு ஃபீனிக்ஸ்.

பூகோள அமைப்பு

வியட்நாம், இந்தோசீனத் தீபகற்பத்தில் இருக்கிறது. சீனா, லாவோஸ், கம்போடியா ஆகியவை அண்டைய நாடுகள். நிலப் பரப்பு 3,31,210 சதுர கிலோமீட்டர்கள். மலைகள். காடுகள் நிறைந்த நாடு. ஆகவே, அடிக்கடி நல்ல மழை பெய்யும். பாஸ்பேட்கள், கரி, மாங்கனீஸ், பாக்சைட், பெட்ரோலியம், அரிமக் கனிமங்கள் ஆகியவை முக்கிய இயற்கைச் செல்வங்கள்.

தலைநகரம் ஹனாய்.

சுருக்க வரலாறு

கி.மு. 25,000 த்தில், அதாவது, சுமார் 27,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனித வாழ்க்கை தொடங்கியிருக்கவேண்டும் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கணிக்கிறார்கள். கி.மு. 3000. ஏராளமான சீனர்கள் தங்கள் நாட்டைவிட்டு வந்து வியட்நாமில் குடியேறினார்கள். பல மன்னராட்சிகள். கி.பி. 1407 இல் சீனா ஆக்கிரமித்தது. இந்த ஆட்சி 1858 இல் பிரெஞ்சுக்காரர்கள் கைகளுக்கு மாறியது. இரண்டாம் உலகப்போரின்போது, வியட்நாம் ஜப்பானியர் வசம் போனது.

1954 இல் ஹோ சி மின் தலைமையில், கம்யூனிஸ்ட்கள் பதவிக்கு வந்தார்கள். ஐ.நா. ஒப்பந்தப்படி, வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என்னும் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடபகுதி கம்யூனிஸ்ட்களிடம்: தென்பகுதி அமெரிக்க ஆதரவாளர்களிடம். இரு தரப்பினருக்குமிடையே 1955 - இல் கடும்போர் தொடங்கியது. அமெரிக்காவின் படைபலம், ஆயுதபலம் தென்பகுதியினர் பக்கம். தேசீயக் கம்யூனிஸ்ட்களின் கொரில்லாப் போரைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறினார்கள். இருபது வருடங்களின் முயற்சிகள் தோற்றன. அமெரிக்கா பின் வாங்கினார்கள். யுத்த பூமியில் அமைதி வந்தது. வியட்நாம் சோஷலிசக் குடியரசு (Socialistic Republic of Vietnam) என்னும் ஒரே நாடு பிறந்தது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி.

மக்கள் தொகை

சுமார் ஒன்பதரைக் கோடி. 81 சதவிகிதம் மதப்பற்று இல்லாதவர்கள். பிறரில், புத்த மதத்தினர் 9 சதவிகிதம்: கத்தோலிக்கர்கள் 7 சதவிகிதம். மொழி வியட்நாமீஸ். பிரெஞ்சு இரண்டாம் அரசுமொழியாக இருந்தது. இப்போது அந்த இடத்தில் ஆங்கிலம். சமுதா யத்தில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 94 சதவிகித மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்காகப் போகிறார்கள். இந்தியாவுக்கும் இந்த வரத்து தொடங்கியுள்ளது.

ஆட்சிமுறை

மக்கள் தேந்தெடுக்கும் அசெம்பிளி. நாட்டுத் தலை வரான ஜனாதிபதியும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக் கப்படுகிறார்.

பொருளாதாரம்

1986 வரை தொழில்கள் அரசு வசம் இருந்தன. மெல்ல மெல்ல தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இன்றும் 40 சதவிகிதத் தொழிற்சாலைகள் பொதுத்துறையில் இருக்கின்றன. பொருளாதாரத்தில் தொழில்துறை யின் பங்கு 38 சதவிகிதம்: சேவைகள் 42 சதவிகிதம்: விவசாயம் 20 சதவிகிதம். நெல், காபி, தேயிலை , நல்ல மிளகு, முந்திரி, ரப்பர், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள். ஜவுளி, காலணிகள், கெமிக்கல்கள், செல்போன்கள், இரும்பு உருக்கு, டயர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை முக்கிய தயாரிப்புத் தொழில்கள். அரசு தொழில்களைத் தனியார் மயமாக்குவதாலும், பொருளாதார வளர்ச்சியாலும், ஏராளமானோர் தொழில் முனைவர்களாவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது நம் ஊர் முனைவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

நாணயம்

டாங் (Dong). ஒரு ரூபாய் கொடுத்தால், கை நிறைய 340 டாங் கிடைக்கும்

இந்தியாவோடு வியாபாரம்

வியட்நாமுக்கு நம் ஏற்றுமதி ரூ.38,318 கோடிகள். ராணுவத் தளவாடங்கள் இதில் முக்கியமானவை. நம் இறக்குமதி ரூ.18,398 கோடிகள். காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரக்கூழ் இதில் கணிசமான இடம் பிடிக்கிறது.

விசிட்

ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை அதிகம். இந்த மாதங்களைத் தவிருங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். உங்கள் பிசினஸ் ஆளுமையை இதை வைத்து எடை போடுவார்கள்.

சந்திக்கும்போது, இரண்டு கைகளையும் இடுப்புக்குச் சற்று மேலாகக் கோர்த்து வைத்தபடி, தலையைக் குனிந்து வணக்கம் சொல்வார்கள். தற்போது, வெறும் தலை குனிதலாகவும், மேற்கத்தியக் கை குலுக்கலாகவும் இது மாறி வருகிறது. ,

விசிட்டிங் கார்டுகள் எல்லோரும் வைத்துக்கொள் வதில்லை. ஆனால், நீங்கள் எடுத்துக்கொண்டு போவது நல்லது. நீங்கள் கார்டு தரும்போது, அவர்கள் திருப்பித் தராவிட்டால், தவறாக நினைக்காதீர்கள். அவர்களை அழைக்கும்போது, பதவிகளோடு அழையுங்கள்.

பேரம் பேசுவது ரத்தத்தோடு ஊறிய பழக்கம். தெருவோரக் கடைகள், டாக்சிகள் என எங்கும் பேரம் சர்வ சாதாரணம். எனவே, பிசினஸ் மீட்டிங்குகளுக்குப் போகும்போது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்பதில் தெளிவாக இருங்கள். தொட்டுப் பேசக்கூடாது. மிக நெருக்கமாக உட்காருவதும் தவறான செயல்.

கட்டாயம் ஒரு விருந்துக்குக் கூப்பிடுவார்கள். பதிலுக்கு, நீங்களும் அவருக்கு ஒரு முறை அழைப்பு விடுக்கவேண்டும். பகலிலும், இரவிலும் நிறைய பீர் அருந்துவார்கள். பிசினஸ் பேச்சுக்கள் மதிய உணவின் போது மட்டுமே. இரவு விருந்து களின்போதும், வீடுகளுக்கு அழைக்கும்போதும், பிசினஸ் பேசுவதில்லை. விளையாட் டுக்கள், இசை, உணவு, சுற்றுலாத் தலங்கள் ஆகியவை பற்றிப் பேசலாம். மூட நம்பிக்கைகள் அதிகம். இந்த உணர்வுகளைக் காயப்படுத்திவிடாதீர்கள்.

உடைகள்

பான்ட், ஷர்ட்கள் போதும். மிக உயர்ந்த அரசு அதிகாரிகளைச் சந்திக்கும்போது, கோட் சூட் அணிவது சிறப்பு.

பரிசுகள் தருதல்

பரிசுகளை எதிர்பார்ப்பார்கள். சில சமயங்களில் லஞ்சமும். முதலில், சம்பிரதாயப் பரிசுகள் தாருங்கள். டீல் முடிந்தபின், விலை உயர்ந்த பரிசுகள் தர வேண்டும். இவற்றை நன்றாகப் பேக் செய்தே தரவேண்டும். வெண்மை, கறுப்பு நிறங்கள் பாரம்பரியப்படி, மரணத்தோடு சம்பந்தப்படுத்தப்படுவை. ஆகவே, இந்த வண்ணப் பேக் கிங்கள் வேண்டவே வேண்டாம்.

வீடுகளுக்குப் போகும்பொது ஒயின், சாக்லெட், பூங்கொத்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும்.

slvmoorthy@gmail.com

SCROLL FOR NEXT