ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ 
வணிகம்

கடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி மைனஸ் 9.5 சதவீதமாகக் குறையலாம்: ரிசர்வ் வங்கி 

பிடிஐ

நடப்பு நிதியாண்டில் கடனுக்கான வட்டிவீதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் தொடர்ந்து 2-வது முறையாக நிலையாகவே வைத்து ரிசர்வ் வங்கியின் நிதிக்குழுக் கொள்கைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடர்கிறது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேவைப்பட்டால் வட்டிவீதம் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும், 2-வது நிதிக்குழுக் கொள்கைக் கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் சக்தி காந்ததாஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் மாற்றமில்லாமல் தொடரட்டும். அதாவது தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடரட்டும் என்று நிதிக்கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ஸ் ரெப்போ ரேட் 3.5 சதவீதமாகவே தொடரும்.

இந்தக் கொள்கை முடிவு இந்த ஆண்டு இறுதிவரை அல்லது அடுத்த ஆண்டுவரை தொடர முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்க நடவடிக்கை தேவைப்படும்பட்சத்தில் எதிர்காலத்தில் வட்டிக்குறைப்பு இருக்கும்.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆனால் 3-வது காலாண்டில் பொருளாதார நடவடிக்கை மீண்டுவரும் என்றாலும் ஒரே மாதிரியாக இருக்காது.

கரோனா வைரஸை எதிர்க்கும் போரில் இந்தியப் பொருளாதாரம் தீர்க்கமான உறுதியுடன் நுழைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாராம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அனைத்துக் காரணிகளும் உணர்த்தினாலும் நம்பிக்கையுடனே இருக்கிறோம்.

நம்முடைய நோக்கம் இப்போது பொருளாதாரத்தை, வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதாகும். கரோனா வைரஸ் காலத்திலும் கிராமப்புறப் பொருளாதாரம் நெகிழ்வுடனே இருக்கிறது. உணவு உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு 2020-21 ஆம் ஆண்டில் பெரும் சாதனை படைக்கும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் பணிக்குத் திரும்பி வருகின்றனர். தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகளுக்கு வரத் தொடங்கி இயல்பு வாழ்க்கைக்கு மாறுகின்றனர். ஆன்லைன் வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. மக்கள் மீண்டும்தங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.

நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2-வது காலாண்டிலிருந்தே பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 9.5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரி்த்தாலும், 3-வது 4-வது காலாண்டில் சீராகும்''.

இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT