வணிகம்

சிறிய நிறுவனங்களால் அதிக வேலை வாய்ப்பு உருவாகும்: வேணு ஸ்ரீனிவாசன் சிறப்பு பேட்டி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது தி இந்துவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து.

சர்வதேச தற்போது நடத்தப்பட்டுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு, தமிழகத்தில் தொழில்ரீதியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சர்வதேச அளவிலான ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி யிருப்பதன் மூலம் முதலாவதாக தேசிய அளவில் தமிழகத்தின் மதிப்பு உயரும். ஒரு "இமேஜ்" கிடைத்துவிடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடுகள் குவியும். ஏற்கெனவே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில் புதிதாக இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.

உங்கள் கணிப்பின்படி எந்தத் துறையில் அதிக முதலீடுகள் குவிந்திருக்கின்றன என்று சொல்ல முடியுமா?

உற்பத்தி துறையில்தான். காரணம், இதில்தான் அதிகப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் பலன்கள் தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்க எத்தனை மாதங்கள் ஆகும்?

தொழில் முதலீடு என்பது ஒரு நேர நடவடிக்கை அல்ல. அது ஒரு தொடர் செயல்பாடு. இன்னும் 3 ஆண்டுகளில் பலன் களை எதிர்பார்க்கலாம். தற்போது முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தகைய சூழலில், முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால் இங்குள்ள சிறப்பு அம்சங்களை நாம் வெளியே எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியம்.

அந்த வகையில், ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023ல் உள்ள முக்கிய அம்சங்கள் உள்பட இங்குள்ள திட்டங்கள், வழங்கப்படும் வசதிகள், சலுகைகளை எடுத்துச் சொன்னால் தான் வெளியே தெரிய வரும். தற்போது மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய, நடுத்தர நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்களால்தான் பல ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.800 கோடி அளவுக்கு முதலீடு செய்வதாக சொல்லி இருக்கிறீர்களே. இதற்கான பணிகள் எப்போது தொடங்கும். இதன் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகும்.?

இன்னும் 3 மாதங்களில் முதலீட்டுக்கான பணிகளை தொடங்கி விடுவோம். இத்தனை வேலைவாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன?

தற்போது முதலீடு செய்ய அதிகம் விரும்பப்படும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நல்ல தொழில் அமைதி, முழு அளவில் மின்சாரம், சிறப்பான அரசு நிர்வாகம், ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி என வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தமிழகம் வளர்ந்து வரும் மாநிலங்களில் முக்கியமானதாக இருந்தாலும் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உள்கட்டமைப்பு வசதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நெடுஞ்சாலை வசதி, துறைமுக வசதி, அரசு-தனியார் கூட்டுமுயற்சி, தொழில்திறன்மிக்க பணியாளர்கள், திறன்மிகு பணியா ளர்களை உருவாக்கக்கூடிய ஐடிஐ-க்கள், பாலிடெக்னிக்குகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் அவசியம்.

இத்தனை ஆண்டு காலமாக வளர்ந்து வந்த ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் சமீபத்தில் தேக்கநிலை நிலவியது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஆட்டோமொபைல் துறையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். பருவமழை குறைவு காரணமாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் வாகன விற்பனை சரிந்துள்ளது. அடுத்த 8 மாதங்களில் ஆட்டோ மொபைல் துறை மீண்டும் புத்துயிர் பெரும் என்று நம்புகிறோம்.

SCROLL FOR NEXT