விவசாயம் சார்ந்த இந்தியா, விவசாயிகளுக்கு உரிய மரியாதையையும், வருவாயையும் அளிக்கும் நாடாக மாறியுள்ளது என மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி கூறினார்.
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடாக உருமாறி உள்ள இந்தியா, விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற மரியாதையையும் அவர்களின் விளைப்பொருட்களுக்கு ஏற்ற வருவாயையும் தரும் பாதையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாதில் இருக்கும் லோதிபூர் என்னும் கிராமத்தில் கிசான் சவுப்பல் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளிடையே உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்த அரசு எடுத்துள்ள உறுதி இடைத்தரகர்களின் கவலையை நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் ஏற்படுத்த சமீபத்திய வேளாண் சட்டங்களின் மூலம் அரசு உறுதி கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் கிடைப்பதை இந்த சட்டங்கள் உறுதி செய்யும் என்று நக்வி கூறினார்.
விவசாயிகளின் வளமான வாழ்வுக்காக இத்தகைய நடவடிக்கைகளை அரசு எடுத்ததாக தெரிவித்த அவர், விவசாயிகள் வளம் மற்றும் அதிகாரம் பெறுவதை உறுதி செய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையே வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் ஆகும் என்றார்.