கரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தை முழுமையாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித்தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து மார்ச் இறுதியில் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் விமானங்கள் தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
விமானத்தில் பயணிப்பதற்காக பதிவு செய்தவர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பித் தருவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அசோக் பூஷன் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
விமான சேவை நிறுவனங்கள், கரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கான தொகையை எந்தவித பிடித்தங்களும் இல்லாமல் முழுமையாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித்தர வேண்டும் எனத் தீர்ப்பில் கூறியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இரண்டுக்குமே இத்தீர்ப்பு பொருந்தும். இந்தத் தொகையை 3 வாரங்களுக்குள் விமான சேவை நிறுவனங்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏஜெண்டுகள் மூலமாகப் பதிவாகியிருந்தால் ரிஃபண்ட் தொகை ஏஜெண்டுகளின் கணக்குக்கு வந்ததும் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கான ரீபண்ட் தொகையை ரத்து செய்யப்பட்டதில் இருந்து 3 வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அதேசமயம் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு மார்ச் 25 முதல் மே 24 வரையிலான காலத்தில் பயணிப்பதற்காகப் பதிவு செய்திருந்தால் அவை கிரெடிட் ஷெல் மற்றும் ஊக்கத்தொகை வசதி மூலம் நிர்வகிக்கப்படும். இந்த கிரெடிட் ஷெல் வசதியை வாடிக்கையாளர்கள் 2021 மார்ச் 31 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் ஷெல் வசதியில் ஜூன் 30 வரை மாதம் 0.5 சதவீத முகமதிப்பும், ஜூன் 30 முதல் மார்ச் 31 வரை மாதம் 0.75 சதவீத முகமதிப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.