உள்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் தேவையான கொள்கை சீர்திருத்தம் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதில் நிலவும் தேவையற்ற, குழப்பமான விதிகளை நீக்கவும், தேவைப்படும் இடங்களில் விதிகளில் மாற்றம் செய்யும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய வர்த்தக்ததுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சர்வதேச வர்த்தக சங்கம் மற்றும் ஃபிக்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், முதலீட்டாளர்களுக்கேற்ற நாடு என அடையாளம் காண்பதில் இந்தியாவுக்கு உள்ள பிரச்சினைகளை நீக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது என்றார்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை உருவாக்கு வதற்குத் தேவையான மாற்றங்களை அரசு கொண்டு வர உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டுக்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல என்ற நிலையைப் போக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.
மேக் இன் இந்தியா பிரசாரத்தை பிரபலமாக்க பிரதமர் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் உள்ள முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருள் உற்பத்தி கேந்திரமாக வளர்ச்சியடையும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சுதந்திரமான அதேசமயம் விதிமுறைகளுக்குள்பட்டு செயல் படும் உற்பத்தி கேந்திரமாக இந்தியா திகழும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு பன்முகங்களில் இந்தியா செயல் பட்டு வருகிறது. குறிப்பாக இளை ஞர்களின் திறன் மேம்பாடு, சாலை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் துறைமுக கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது ஆகியன இதில் அடங்கும். தொழில் பேட்டை மற்றும் சரக்ககங்களை உருவாக்குவதோடு மின்னுற் பத்தியை அதிகரிப்பது, அதை இழப்பின்றி விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒருபுறம் எடுத்தாலும் உள்நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.
இந்திய நிறுவனங்களே இங்குள்ள மின் தட்டுப்பாடு மற்றும் வரி பிரச்சினை காரணமாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதை அரசு அறியும் என்று குறிப்பிட்ட அவர், இங்கு தொழில் தொடங்குவதற்கேற்ற சூழலை உருவாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறினார். குறித்த காலக் கெடுவுக்குள் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது, லைசென்ஸ் முறையை ஒழித்தது, ராணுவ தளவாட உற்பத்திக்கு அனுமதி ஆகிய அனைத்தும் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்.