பணவாட்டம் இந்திய பொருளா தாரத்துக்கு புதிய சவால் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். ஆனால் அதேசமயம் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
புதுடெல்லியில் செய்தியாளர் களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது.
இந்திய பொருளாதாரத்துக்கு தேவையான வளர்ச்சி இல்லை யென்றாலும், பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் பயணிக்கிறது. வரப்போகும் சீர்திருத்தங்களால் பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும். வருங்காலத்தில் பணவீக்கத்தை விட பணவாட்டத்தால் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருந்தாலும், பொருளாதாரம் மீண்டு வருவதை தகவல் அடிப்படையில் உறுதி செய்ய முடியும். வருவாய் அதிகரிப்பு மற்றும் கடன் வளர்ச்சி விகிதங்கள் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்பதை உறுதி செய்கின்றன.
பொருளாதார ஆய்வறிக்கை யின் போது 8 முதல் 8.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தோம். தற்போது 8 சதவீத அளவில் நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி இருக்கும்.
முதல் காலாண்டு முடிவுகளை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஜிடிபி தகவல்களை மொத்த நிதி ஆண்டுக்குதான் பார்க்க வேண்டும். முதல் காலாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி வந்திருக்கிறது. நாங்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கிறோம். நிலைமை மேம்பட்டிருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடப்பாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5 முதல் 5.5 சதவீதமாக இருக்கும்.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரி வருவாய் 37 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதே நிலைமையிலே வரி வருவாய் இருக்கும்பட்சத்தில் ஜிடிபி வளர்ச்சி மேலும் உயரும். நாம் கணித்தைவிடவும் உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
பொருளாதாரம் எப்படி உயரும் என்பதை சரியாகக் கூற முடியாது. ஆனால் கச்சா எண்ணெய் சரிவு, பேரியல் பொருளாதாரத்தில் உள்ள நிலைத்தன்மை, தொடரும் சீர்திருத்தங்கள், குறையப்போகும் வட்டி விகிதம் அனைத்தும் ஒரு புள்ளியில் இணையும் போது பொருளாதார வளர்ச்சி நாம் முன்பு கணித்த நிலையில் இருக்கும். வளர்ச்சி அதிகமாக இருக்கும் போது வேலைவாய்ப்புகளும் அதிகமாக உருவாகும் என்றார்.
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அர்விந்த் சுப்ரமணி யன் பதில் கூற மறுத்துவிட்டார்.
நடப்பாண்டில் இதுவரை 0.75 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்திருக்கிறது. ஆனால் கடந்த முறை வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 29-ம் தேதி நடக்க இருக்கிறது.
முதல் காலாண்டு ஜிடிபி முடிவுகள் வந்தவுடன் பிட்ச் உள்ளிட்ட பெரும்பாலான ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியா வின் ஜிடிபி வளர்ச்சி விகித கணிப்பை குறைத்துள்ளன என்பது முக்கியமானது.