வணிகம்

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்: நரேந்திர சிங் தோமர் தகவல்

செய்திப்பிரிவு

புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை 86,81,928 புதிய வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, பிரதமரின் கிராம சாலை திட்டம் தொடங்கப்பட்டது. 500 பேருக்கு மேல் வசிக்கும் சமவெளி கிராமங்கள், 250 பேருக்கு மேல் வசிக்கும் மலைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளை இணைக்கும் வகையில் தரமான சாலைகள் அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கிராமங்களில் இருக்கும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைகளை மேம்படுத்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 2வது பகுதி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள், வேளாண் சந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை இணைக்க 1,25,000 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் 3-வது திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களில் பிரதமரின் கிராம சாலை திட்ட பணிகளுக்கு 90 % செலவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. மற்ற மாநிலங்களில் 60% செலவை ஏற்றுக் கொண்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும், வேலை அட்டை வைத்துள்ளனர். இந்த அட்டை புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை 86,81,928 புதிய வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மொத்தம் 36,64,368 வேலை அட்டைகள்தான் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT