குறுகிய கால திறன் வளர்த்தல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 நிதியாண்டுகளில் முறையே 1,33,589, 1,27,850 மற்றும் 1,73,156 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய திறன் வளர்த்தல் துறை மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியதாவது:
கோவிட்-19 பொதுமுடக்கத்துக்கிடையே 'ஈ-ஸ்கில் இந்தியா' தளத்தின் வழியே தேசிய திறன் வளர்த்தல் நிறுவனத்தின் மூலம் இணைய வழி திறன் பயிற்சிகளை, திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் வழங்குகிறது.
2020 செப்டம்பர் 21 முதல் நேரடி பயிற்சிகளை உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சிகள் நடத்தப்படும்.
பொதுமுடக்கத்தின் போது 9,38,851 நபர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 1,31,241 பேர் பாரத்ஸ்கில் கைபேசி செயலியின் மூலம் ஆன்லைன் பயிற்சி வசதிகளைப் பெற்றனர்.
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய பயிற்சியியல் ஊடக நிறுவனம், 3080 இணைய வழி வகுப்புகள் மூலம் 16,55,953 பேரை சென்றடைந்துள்ளது.
குறுகிய கால திறன் வளர்த்தல் பயிற்சிகளை அளிப்பதற்காக பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா-2016-20 என்னும் திட்டத்தை நாடு முழுவதும் திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வருடங்களில், 2020 மார்ச் 17 வரை, நாடு முழுவதும் 88.91 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய 3 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் முறையே 1,33,589, 1,27,850 மற்றும் 1,73,156 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் முறையே 21,55,838, 20,97,297 மற்றும் 46,38,069 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.