ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2019-20 நிதியாண்டில் 82.64 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
பெட்ரோலிய திட்டமிடுதல் மற்றும் பகுப்பாய்வுக் குழு அளித்த தகவலின் படி, ஏப்ரல்-ஜூலை 2020 காலகட்டத்தில், தோரயமாக 9,228 எம் எம் எஸ் சி எம் இயற்கை எரிவாயு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது, 9,228 எம் எம் எஸ் சி எம் நீர்ம எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.
517 கி.மீ நீளமுள்ள பரதீப்-ஹால்தியா-பரவுனி குழாய் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. 2020 ஆகஸ்ட் 31 வரை 43.4 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்டோபர் 19 முதல் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று அரசு முடிவு செய்தது. அது முதல், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
பி எஸ் 6 எரிபொருள் தரம் மிக்கதென்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் உற்பத்திக்காக இந்திய நிறுவனங்கள் அதிக முதலீட்டை செய்துள்ளன. முதலீட்டை ஓரளவுக்கு ஈடு செய்யும் விதமாக 2020 ஏப்ரல் 1 முதல் விலை மாற்றியமைக்கப்பட்டது.
ஏழைக் குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் இலக்கு 2019 செப்டம்பர் 7 அன்று எட்டப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டில் 200.3 லட்சம் இணைப்புகளும், 2017-18-ஆம் ஆண்டில் 155.7 லட்சம் இணைப்புகளும், 2018-19-ஆம் ஆண்டில் 362.9 லட்சம் இணைப்புகளும், 2019-20-ஆம் ஆண்டில் 82.64 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.