இணையம் மூலமான விற்பனையின் போது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் காகிதக் கட்டுதல் பயன்பாடு பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது,
இரண்டு மாதங்களுக்கு முன்பு மின் வணிகத்தில் நுழைந்துள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், நெகிழி மாசை தடுப்பதற்கும், 'பசுமை வேதியியல்' என்னும் அதன் கொள்கையை சார்ந்தும், முதல் நாள் முதலே கையால் செய்யப்பட்ட காகிதங்களையே பொருட்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்துகிறது.
கையால் செய்யப்பட்ட உறைகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவற்றையே நீர் சார்ந்த பொருட்கள் தவிர மற்ற பொருட்களைக் கட்டுவதற்கு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் பயன்படுத்துகிறது. இந்த செயல் பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழியின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மின் வணிக நிறுவனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் கையால் செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.