வணிகம்

எப்ஐஐ மீது நிலுவை வரி வழக்குகளை தொடர வேண்டாம்: வரித் துறை அதிகாரிகளுக்கு சிபிடிடி உத்தரவு

பிடிஐ

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஈட்டிய லாபம் மீதான குறைந்தபட்ச மாற்று வரி குறித்த நிலுவை வழக்குகளை தொடர வேண்டாம் என்று மத்திய வரி வருவாய் ஆணையம் (சிபிடிடி) தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளது.

நேற்று முன் தினம் (செவ்வாய்க் கிழமை) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, முன் தேதியிட்ட வரி வசூல் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாது, அதிலும் குறிப்பாக குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு தொடர்பான நிலுவை வழக்குகளை மேற்கொள்ளாது என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே வரி வருவாய் ஆணையம் தனது அதிகாரிகளுக்கு நிலுவை வழக்குகளைத் தொடர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சிபிடிடி வெளியிட்ட சுற்றறிக்கையில், குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு தொடர்பாக வருமான வரித்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதில், இந்தியாவில் நிரந்தர நிறுவனமோ அல்லது வர்த்தகமோ புரியாத அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி ஏப்ரல் 1, 2015-க்கு முன் தேதியிட்டு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஈட்டும் முதலீடுகள் மீதான லாப த்தில் குறைந்தபட்ச மாற்று வரி விதிக்கப்படமாட்டாது என ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.

அந்நிய முதலீடுகள் மீதான லாபத்துக்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இத்தகைய வரி விதிப்பு தேவையில்லை என குறிப்பிட் டிருந்தது. இதை ஏற்று முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறை யைக் கைவிடுவதாக ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) செலுத்த வேண்டிய குறைந்தபட்ச மாற்று வரி ரூ. 602.83 கோடிக்கு 68 நிறுவனங்களுக்கு மத்திய வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இவ்விதம் வரி விதிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 1, 2015-க்கு முன்பு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடுகள் மீது ஈட்டிய லாபத்துக்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பது தொடர்பாக ஆராய்ந்தது. இக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 25-ம் தேதி தாக்கல் செய்தது. அதில் எப்ஐஐ மற்றும் எப்பிஐ ஆகியன இங்கு நிரந்தர முகவரி இல்லாமல் செயல்படும்போது அவற்றுக்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பது வருமான வரிச் சட்டம் பிரிவு 115ஜேபி-யின் கீழ் பொருந்தாது என்று குறிப்பிட்டது. இதை ஏற்ற மத்திய அரசு இதற்கேற்ப வருமான வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதாக ஒப்புக் கொண்டது.

இது தொடர்பாக வருமான வரி சட்டத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டுகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் செய்த முதலீடு 2,000 கோடி டாலராகும். இது தவிர கடன் பத்திரங்களில் 2,800 கோடி டாலர் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த பட்ச மாற்று மாற்று வரி விதிப்பு சட்டம் இதுவரை ஒரு முறைகூட எப்ஐஐ மற்றும் எப்பிஐ மீது விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனச் சட்டம் பிரிவு 6-ன் கீழ் கணக்கு வழக்குகளை முறை யாக பராமரிக்க வேண்டும் என்ற செபி-யின் விதிமுறை எப்ஐஐ மற்றும் எப்பிஐ-களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை.

அப்படியிருக்கையில் எப்ஐஐ மற்றும் எப்பிஐ ஆகியவை நிறுவனச் சட்டம் 1956 விதி 591 முதல் 594 வரையான பிரிவின்கீழ் அடங்காது என்று ஷா குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

1993-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தில் எப்ஐஐ, எப்பிஐகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக எவ்வித நிபந்தனையும் சேர்க்கப்பட வில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் நிறுவன சட்ட நடை முறைகளின் கீழ் எப்ஐஐ மற்றும் எப்பிஐ வருவதில்லை. எனவே குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு அவற்றுக்குப் பொருந்தாது என்று தனது 68 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT