நிதின் கட்கரி 
வணிகம்

ஆட்டோமொபைல் துறை இறக்குமதியை குறைக்க வேண்டும்: அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் துறை இறக்குமதியைக் குறைக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது:

இந்தியா ஆட்டோமொபைல் உலகின் உற்பத்தி மையமாக உருவாவதற்கான திறன்களுடன் இருக்கிறது. எனவே ஆட்டோ மொபைல் துறை இறக்குமதியை குறைக்க வேண்டும். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகளை ஆட்டோமொபைல் துறை உருவாக்க முடியும்.

அரசும் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு வருகிறது. ஆட்டோ உதிரி பாகங்கள் துறை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக வேண்டும். இதன்மூலம் இந்திய எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். எனவே இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தி சந்தையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

இதனால் ஆரம்பத்தில் லாபம் குறைவாக இருந்தாலும் வால்யூம் அதிகரிக்கும் போது ஏற்றுமதி சந்தையில் முக்கிய நிறுவனமாக மாற முடியும். இந்திய நிறுவனங்கள் மீது 100 சதவீத நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த நோக்கில் இந்திய நிறுவனங்கள் பயணித்தால் 5 ஆண்டுகளில் உலக ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தி மையமாக இந்தியா திகழும். அதற்கேற்ற வகையில் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் உதவிகளை அரசு திட்டமிடும்.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

SCROLL FOR NEXT