ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புகையளவு மோசடியில் சிக்கி யுள்ளதற்கு எண்ணற்ற முறை மன்னிப்பு கேட்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மார்டின் வின்டர்கோர்ன் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத் தயாரிப்புகளான பசாட், ஜெட்டா உள்ளிட்ட கார்களில் புகையளவு மோசடி செய்யப்பட்டிருப்பதை நிறுவனமே ஒப்புக் கொண்டது. ஏறக்குறைய 1.10 கோடி கார்கள் இவ்விதம் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு நடத்தும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ மூலம் உரையாற்றிய அவர், எண்ணற்ற தடவை மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள் ளார். இது தொடர்பாக நிறுவனத் தில் விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு காருக்கு 37,500 டாலர் (சுமார் ரூ.24.75 லட்சம்) வீதம் ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதில் தனி நபர் சம்பந்தப்பட்டிருந்தால் ஒரு காருக்கு 3,750 டாலர்(சுமார் ரூ.2.47 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 1,800 கோடி டாலர் (சுமார் ரூ.1.19 லட்சம் கோடி) அபராதம் செலுத்த நேரிடலாம் எனத் தெரிகிறது.